வியாழன், ஏப்ரல் 02, 2015

சோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மந்திரிக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

மத்திய மந்திரி சபையில் நிறுவனங்கள் துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

நிருபர்களிடம் சாதாரண நிலையில் அவர் கூறும் போது, சோனியா காந்தி வெள்ளையாக இருப்பதால்தான் அவரை காங்கிரசார் தலைவராக்கி இருக்கிறார்கள். ராஜீவ்காந்தி கருப்பாக இருக்கும் நைஜீரிய பெண்ணை திருமணம் செய்தால் அவரை ஏற்பார்களா? என்றார். மேலும் மலேசிய விமானம் காணாமல் போனது போல் ராகுல்காந்தியும் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இதற்கு காங்கிரஸ் தலைமை பதில் சொல்ல தயாராக இல்லை என்றும் கிரிராஜ்சிங் கூறினார். 

அவரது இந்த கருத்தை ஒரு நிருபர் தனது மொபைல் போனில் பதிவு செய்து இருந்தார். அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. மத்திய மந்திரி கிரிராஜ்சிங்கின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

பாட்னாவில் உள்ள அவரது வீட்டு முன்பு காங்கிரசார் முட்டை, தக்காளிகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றும் 2–வது நாளாக கிரிராஜ் சிங்குக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். 

டெல்லி, மும்பை, பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டெல்லியில் உள்ள மத்திய மந்திரி கிரிராஜ் சிங் வீட்டு முன்பு காங்கிரசார் போராட்டம் செய்தனர். பெரும் திரளான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்ததில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷாவுக்கு எதிராக கோஷமிட்டனர். மத்திய மந்திரி பதவியில் இருந்து கிரிராஜ் சிங்கை உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். 

டெல்லியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தை காங்கிரஸ் பெண் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் பிரதமருக்கு எதிராக கோஷமிட்டனர். அதோடு கிரிராஜ் சிங்கின் படத்தையும் செருப்பால் அடித்தனர். உருவ பொம்மைகளையும் எரித்தனர். 

இதே போல பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடத்த பெங்களூரிலும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர். மும்பை, பாட்னாவிலும் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேராட்டங்களின் போது போலீசார் லேசான தடியடியும் நடத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக