சனி, மார்ச் 28, 2015

பட்ஜெட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு முதல்வர் வீடு முற்றுகை தடுக்க விவசாயிகளுக்கு வீட்டுச்சிறை !!!

சென்னையில் முதல்வர் வீட்டை முற்றுகையிட இருந்த விவசாயிகள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டனர். திருச்சியில் இதைகண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்ததால் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சி காரணமாக விவசாயிகளால் பயிர்கள் சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே, விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பை தமிழக பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். அறிவிக்காவிட்டால், விவசாயிகளைத் திரட்டி முதல்வர் வீட்டு முன்பு நேற்று முதல் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் ஏற்கனவே முடிவு செய்து இருந்தது. ஆனால் தமிழக பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி குறித்த எந்தவித அறிவிப்பும் இடம் பெறவில்லை.

இதையடுத்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அந்தந்த மாவட்டத் தலைவர்கள் தலைமையில் விவசாயிகள் ரயில் மூலம் சென்னை சென்று முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட இருந்தனர். திருச்சி மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் இச்சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று காலை பல்லவன் எக்ஸ்பிரசில் செல்ல முடிவு செய்திருந்தனர். இதற்காக ரயிலில் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு முசிறி டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் சென்றனர்.

 அவரது வீட்டில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருந்தது தெரியவந்தது. வீட்டை விட்டு யாரும் வெளியேறினால் அனைவரும் கைது செய்யப்படுவர் என எச்சரித்ததோடு, வீட்டிலேயே விவசாயிகளை சிறை வைத்ததுடன் ஏராளமான போலீசார் வீட்டை சுற்றி குவிக்கப்பட்டதால் விடிய, விடிய பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை புறநகர் மாவட்ட போலீசார் சென்றதும், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் அய்யாக்கண்ணு வீடு வந்தது. உதவிகமிஷனர் கபிலன் தலைமையில் போலீசார் வீட்டை சுற்றி நின்றுகொண்டிருந்ததால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அய்யாக்கண்ணு கூறியதாவது: போலீசார் எனது வீட்டிற்கு வந்து விவசாயிகளை வீட்டு காவலில் சிறை வைத்ததோடு செல்போன்களை வாங்கி கொண்டனர். வீட்டை சுற்றி போலீசார் உள்ளனர். தமிழக வரலாற்றிலே விவசாயிகளை வீட்டு காவலில் சிறை வைத்தது இதுவே முதல் தடவை. கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு விவசாயிகளுக்கு உரிமை இல்லையா?  இப்படி தமிழகம் முழுவதும் விவசாயிகள் வீடுகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியேறினால் கைது செய்வோம் என மிரட்டுகின்றனர். ஜனநாயக நாட்டில் விவசாயிகள் போராட உரிமை இல்லையா என்றார்.  போலீசின் செயல்பாடுகளைக் கண்டித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களை விவசாயிகள் சந்திக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் அய்யாக்கண்ணு வீட்டிலிருந்த போலீசார் காலை 10.30 மணி அளவில் வெளியேறியதால் அய்யாகண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டரை சந்தித்து மனுகொடுக்க சட்டையின்றி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் புறப்பட்டனர்.  தில்லைநகர் கே.டி.தியேட்டர் அருகே வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை மறித்து ஊர்வலமாக செல்ல அனுமதி கிடையாது. போலீஸ் வாகனத்தில் ஏறுங்கள், கலெக்டர் அலுவகத்தில் விடுகிறோம் என்றனர். விவசாயிகளை கைது செய்தால் போராடுவோம் என ஆவேசமடைந்த விவசாயிகள் திடீரென சாலையில் படுத்து உருண்டு மறியல் செய்தனர். இதனால் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு மீண்டும் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் போராட்டத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. 

கலெக்டரிடம் புகார் கலெக்டர் பழனிச்சாமியிடம் விவசாயிகள் மனு  கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 300 விவசாயிகள் முதல்வர் வீட்டு முன் இன்று உண்ணாவிரதம் இருக்க செல்ல ரயிலில்  டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால் போலீசார் எங்களை வீட்டுக்காவலில் வைத்துவிட்டனர். செல்போனையும் பறித்துக்கொண்டனர். உரிமைகளுக்காக விவசாயிகள் போராடக்கூடாதா. விவசாயிகளை 12மணி நேரம் சிறைவைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக