புதன், மார்ச் 11, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய விசாரணை முடிவுக்கு வந்தது.

எழுத்துப்பூர்வமான இறுதி வாதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார். 14 பக்க அறிக்கை தாக்கல் செய்த சாமி வாதங்களையும் முன் வைத்தார். ஜெயலலிதா சொத்து குவித்ததை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஐகோர்ட் உறுதி செய்ய சுப்பிரமணிய சாமி வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு தேதி நெருங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீர்ப்பை பொறுத்தே ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் அமையும் என்பதால் இந்த தீர்ப்பை அறிய நாடு முழுவதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பரில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முதலில் கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. உச்சநீதிமன்றத்தை அணுகிய ஜெயலலிதாவுக்கு அக்டோபர் 17-ம் தேதி ஜாமீன் கிடைத்தது. ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க 3 மாத அவகாசம் உச்சநீதிமன்றம் அளித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. ஜனவரி 5-ம் தேதி விசாரணையை நீதிபதி குமாரசாமி தொடங்கினார். 41 நாட்கள் நடைபெற்ற விசாரணை இன்றுடன் முடிவுக்கு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக