சூரிய சக்தி மூலம் 22 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து ஜெர்மனி உலக சாதனை படைத்துள்ளது. ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைந்து கதிர்வீச்சு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஜெர்மனி, எட்டு அணு மின் நிலையங்களை மூடி விட்டது. மீதமுள்ள ஒன்பது அணுசக்தி நிலையங்களை வரும் 2022ம் ஆண்டுக்குள் மூடி விட திட்டமிட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக காற்றாலை, சூரிய சக்தி மூலம்
மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.புதுப்பிக்கத் தக்க எரிசக்தி தொழில் மையத்தின் தலைவர் நார்பர்ட் அல்நோச் குறிப்பிடுகையில், "20 அணு சக்தி நிலையங்கள் முழு வீச்சில் தயாரிக்கக்கூடிய 22 ஜிகாவாட் (1 ஜிகாவாட் 1000 மெகாவாட்டுக்கு சமம்) மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் ஒரு மணி நேரத்தில் தயாரித்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த அளவு மின்சாரம் நாட்டின் பகல் நேர மின்சார தேவையில் பாதியை பூர்த்தி செய்யக் கூடியது. உலகில் வேறெந்த நாட்டிலும் சூரிய சக்தி மூலம் இவ்வளவு அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதில்லை. சமீப காலமாக 20 ஜிகாவாட் அளவுக்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்தது.
கடந்த மாதம் 29ம் தேதி அதிகபட்சமாக 22 ஜிகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கப்பட்டது' என்றார். ஜெர்மனியில் புதுப்பிக்க தக்க எரிசக்தி மூலம் 20 சதவீத மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தியை அதிகரித்து, அதிக புகையை வெளியிடும் அனல் மின் உற்பத்தியை குறைக்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு மணி நேரத்துக்கு, 14 ஜிகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் தயாரிக்கப்பட்டு வந்தது.
தற்போது அது 22 ஜிகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது. சூரிய சக்தி மூலம் 26 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சூரிய சக்தி மூலம் உலகிலேயே அதிக அளவு மின்சாரம் தயாரிப்பதாக ஜெர்மன் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இந்த நாட்டில் தான் மின் கட்டணமும் அதிகமாக உள்ளதாகவும், சூரியசக்தி, காற்றாலை மின்சாரங்கள் நாட்டின் மின் தேவையை முழு அளவு பூர்த்தி செய்யாது, என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக