குவஹாத்தி:இனக்கலவரத்திற்கு பிறகு அஸ்ஸாமில் அமைதியான சூழலை நோக்கி திரும்பியுள்ளது. திங்கள்கிழமை மாநிலத்தின் எந்த பகுதியிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை. ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொக்ராஜர், சிராக், துப்ரி ஆகிய மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அமைதியான சூழலில் பெருநாள் கொண்டாடப்பட்டதாக
அஸ்ஸாம் மாநில டி.ஜி.பி(சட்டம்-ஒழுங்கு) எல்.ஆர்.பிஷ்ணோய் தெரிவித்துள்ளார்.
அமைதியை பேண முதல்வர் தருண்கோகோய் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். குவஹாத்தியில் மக்கோவா ஈத்கா திடலில் மக்களிடையே அவர் உரையாற்றினார். பெருநாள் தினம் சாந்தியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என கோகோய் நம்பிக்கை தெரிவித்தார்.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துயர் துடைப்பிற்கும், மறுவாழ்வுக்கும் அரசு முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே, பெங்களூரில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இரண்டு ரெயில்கள் குவஹாத்தியை வந்தடைந்தன.
அதேவேளையில், வடகிழக்கு மாநிலத்து மக்கள் பெங்களூர் மற்றும் இதர பகுதிகளில் இருந்து கூட்டாக வெளியேறுவதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்தார். குழப்பம் உருவாக்கும் முயற்சியை அவர் கண்டித்தார்.
கொல்கத்தாவில் ஈத்கா திடலில் பெருநாள் தொழுகைக்காக வந்த மக்களிடையே அவர் உரை நிகழ்த்தினார். வதந்திகளை நம்பாதீர்கள் என்றும், அமைதியை பேணுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
‘துயரம் அனுபவிக்கும் அஸ்ஸாமிற்கு நாம் அனைத்து உதவிகளையும் வழங்குவோம். ஜல்பாய்குடி மாவட்டத்தில் புகலிடம் தேடியவர்கள் நமது விருந்தாளிகள் ஆவர். அஸ்ஸாமிற்கு திரும்ப விரும்பாதவர்களுக்கு தொடர்ந்து அடைக்கலம் தருவோம்’- என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக