புதுடெல்லி:அரசியல் ஆதாயத்திற்காக பாராளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கும் பாரதீய ஜனதா கட்சி ப்ளாம் மெயில் அரசியல் விளையாட்டை ஆடுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி கூறியுள்ளார். பா.ஜ.கவின் திசைதிருப்பும் அரசியலை எதிர்கொள்ள
காங்கிரஸ் கட்சி தாயாரக வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றினார் சோனியா காந்தி. அப்பொழுது அவர் கூறியது:
“கடந்த சில வாரங்களாக நம் நாடு மிகப் பெரிய பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அஸ்ஸாமில் வன்முறை வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல அப்பாவிகளின் உயிர் பறிபோனது. இதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அஸ்ஸாம் வன்முறையைத் தொடர்ந்து பெங்களூர், மும்பை நகரங்களில் வாழும் வடகிழக்கு மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது.
நாட்டில் உள்ள மற்றவர்களைப் போன்றே வடகிழக்கு மாநில மக்களுக்கும் அனைத்து உரிமையும் உண்டு. சமூக இணையதளங்களைப் பயன்படுத்தி சில விஷமிகள் பரப்பிய பீதியை எந்த அரசாலும் ஏற்றுக் கொள்ளாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய மிக முக்கியமான பிரச்னையை நாடு எதிர்கொள்ளும் போது பாராளுன்றத்தில் அதன் பணிகள் நடைபெற எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி தடையாக உள்ளது. இது வருத்தத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசை பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் (அத்வானி) ‘சட்டவிரோதமாக ஆட்சிக்கு வந்த அரசு’ என கூறுகிறார்.
உள்நோக்கத்துடன் கூடிய பாஜகவின் குறைகூறும் போக்கை இன்னும் எத்தனை காலம் நாம் சகித்துக் கொள்ள வேண்டும்?
ஏற்கெனவே பலமுறை கூறியதைப் போல் சிஏஜி அறிக்கை ஆகட்டும், வேறு எந்த விஷயமாகட்டும், மத்திய அரசும் பிரதமரும் விவாதிக்கத் தயாராகவே உள்ளனர். ஆனால், அதற்குத் தகுதியான இடம் பாராளுமன்றம்தானே.
ஆனால், அங்கும் நம்மைச் செயல்பட விடாமல் மிரட்டல் போக்குடன் செயல்படும் அரசியலை பா.ஜ.க. கடைப்பிடிக்கிறது. அந்தக் கட்சியின் தலைமையில் செயல்படும் கூட்டணிக் கட்சிகளுக்குக்கூட இந்தப் போக்கு பிடிக்கவில்லை. இதன் மூலம் கடும் வலிகளைச் சுமந்து நமது முன்னோர்கள் உருவாக்கிய அரசியலமைப்பையே பா.ஜ.க. கேலிக்கூத்தாக்கி வருகிறது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் திங்கள்கிழமை அளித்த அறிக்கை மிகத் தெளிவாகவும் விரிவாகவும் புரியும் விதத்திலும் உள்ளது. பா.ஜ.க.வின் தவறான பிரசாரத்தை அந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது.
இனி வரும் மாதங்களின் பெரும்பகுதி, பல்வேறு தேர்தல்களில் கவனம் செலுத்துவதிலேயே சென்று விடும். நாம் பல சாதனைகளை செய்துள்ளோம். அதனால் அதைச் சொல்லி நம்மை பாதுகாப்பதில் தயக்கம் காட்டத் தேவையில்லை.” என்றார் சோனியா காந்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக