திருவனந்தபுரம்:சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற பெயரில் இந்தியாவில் எவ்வித அரசு உளவுத்துறை அமைப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அஸ்ஸாம் மாநில மக்களுக்கு எதிராக எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி செய்திகளை பரப்பி பீதியூட்டியது பாப்புலர் ஃப்ரண்டும், பங்களாதேஷின் ஹூஜி அமைப்பும் தான் என்று செய்தியை பரப்புரைச்
செய்த ஊடகங்களின் பொய் அம்பலமாகியுள்ளது.
சைபர் தாக்குதல்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை திரட்டி மத்திய அரசுக்கு அறிக்கையை அளிப்பது கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆகும். நேசனல் டெக்னிகல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் என்ற இன்னொரு அமைப்பும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரண்டு ஏஜன்சிகளின் கீழ் மேற்கூறிய சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற அமைப்பு செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே இல்லாத அமைப்பின் பெயரால் அவதூறுச் செய்தியை பரப்பியதன் பின்னணியில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அஸ்ஸாமில் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனக்கலவரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், அகதிகளாக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் மறுவாழ்வுக்காக பாடுபடும் சில முஸ்லிம் அமைப்புகளின் சேவைகளை சீர்குலைக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட சூழ்ச்சியோ? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்திதான் தாங்கள் வெளியிட்ட மேற்கண்ட சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற செய்தியின் அடிப்படை என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் மஞ்சேரியில் அஸ்ஸாம் தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது பாப்புலர் ஃப்ரண்ட் என்று கேரளாவில் இருந்து வெளியாகும் தேசாபிமானி என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடு அவதூறுச் செய்தியை வெளியிட்டது. ஆனால், தேசாபிமானி பத்திரிகை வெளியிட்ட செய்தி அவதூறானது என்றும், இதன் பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தின் மீது வழக்கு எதுவும் தொடரப்படவில்லை எனவும் மலப்புறம் மாவட்ட செயலாளர் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் பணிபுரியும் செஞ்சூரி ஹாலோப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் முஹம்மது அஷ்ரஃப், பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் எவரும் அஸ்ஸாம் மாநில தொழிலாளர்களை மிரட்டவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு தேசாபிமானி செய்தியை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்த தினங்களிலும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த மக்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவர்கள் கூட்டமாக கேரளாவை விட்டு வெளியேறுவதாகவும் தேசாபிமானி அவதூறான செய்தியை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்துதான் இத்தகைய அவதூறு செய்திகள் வெளியாக துவங்கின.
இதனிடையே, திருச்சூர் ரேஞ்ச் ஐ.ஜி எஸ்.கோபிநாத், செய்தியாளர்கள் சந்திப்பில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் கூட்டாக வெளியேறுவதாக வெளியான செய்தி அடிப்படையற்றது என பேட்டி அளித்தார். கணேஷா திருவிழா மற்றும் இதர காரியங்களுக்காக ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களுக்கு வந்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்தது என்று அவர் தெரிவித்தார். கூட்டமாக அஸ்ஸாம் மக்கள் வெளியேறவில்லை என்று கூறிய கோபிநாத், இத்தகைய பிரச்சாரம் தவறானது என தெரிவித்தார்.
வதந்தியான செய்தியின் அடிப்படையில் பெங்களூர் மற்றும் இதர நகரங்களில் இருந்து வடகிழக்கு மாநிலத்து மக்கள் கூட்டமாக வெளியேறிய பொழுது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திட்டமிட்ட சூழ்ச்சி கேரளாவில் நடந்துள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். மஞ்சேரியை குறித்த தேசாபிமானியின் அவதூறான செய்தியும் தேசிய அளவில் சர்ச்சையான ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் அவதூறு செய்தியும் மலப்புறத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சூழ்ச்சித் திட்டமாகும் என்று அஷ்ரப் மெளலவி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடக்க இருப்பதாக வதந்தி செய்திகளை பரப்பியதற்காக அரசாங்கத்தால் தடைச் செய்யப்பட்ட இணையதளங்கள் மற்றும் ஃபேஸ்புக் அக்கவுண்டுகளில் 20 சதவீதமும் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களுக்கு உரியது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளாவில் ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரால் அவதூறான செய்தியை பரப்பிய ஹிந்து ஜாக்ருதி என்ற ஹிந்துத்துவா இணையதளமும் தடைச் செய்யப்பட்ட இணையதளங்களில் அடங்கும்.
புனே, பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் பீதியை பரப்பிய எஸ்.எம்.எஸ் வதந்தி செய்திகளின் பின்னணியிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளனர். பெங்களூரில் வடகிழக்கு மாநிலத்து மக்கள் கூட்டமாக வெளியேற துவங்கும் முன்னர் பரப்புரைச் செய்யப்பட்ட எஸ்.எம்.எஸ் வதந்தி செய்திகளின் பின்னணியிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அண்மையில் பெங்களூரில் ஒரு ரெயிலில் 3 பெண்கள் குண்டுகளை வைத்தார்கள் என்ற பீதியூட்டும் வதந்திச் செய்தியை பரப்பியது ஒரு பஜ்ரங் தள் உறுப்பினர் என்பதை போலீஸார் கண்டுபிடித்திருந்தனர்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக அவதூறான வீடியோ காட்சியை பரப்பியதும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாம் என்பதை போலீஸ் கண்டுபிடித்தது. இந்த வீடியோ பாகிஸ்தானின் சிந்துமாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தில் அந்நாட்டின் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றப்பட்ட வீடியோ காட்சியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக