செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

சிரியாவில் 300 உடல்கள் மீட்பு !

More than 300 bodies found in Syrian town of Daryaடமாஸ்கஸ்:சர்வாதிகாரி பஸருல் அஸதிற்கு எதிரான போராட்டம் இரத்தக் களரியாக மாறியுள்ள சூழலில், சிரியாவில் கடந்த 2 தினங்களிடையே விமானப்படை தளபதி உள்பட நூற்றுக்கணக்கான பேர் பலியாகியுள்ளனர். தலைநகரான டமாஸ்கஸ் மற்றும் அதன் அண்மை பிரதேசமான தர்ஆவில் 300க்கும் மேற்பட்ட நபர்களின் இறந்த உடல்கள்
மீட்கப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃப்ரீ சிரியா ஆர்மியிடமிருந்து தர்ஆ நகரை மீட்க பஸ்ஸார் அல் ஆஸாதின் ராணுவம் நடத்திய தாக்குதலில் இவ்வளவு பேரும் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீடுகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் உள்ள தற்காலிக அகதிகள் முகாம்களில் பெரும்பாலான இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறந்த உடல்களில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டன. பழிவாங்கும் நடவடிக்கையாக கொடுங்கோலன் பஸ்ஸாருல் ஆஸாத் இப்படுகொலைகளை நிகழ்த்தியதாக மனித உரிமை ஆர்வலர் அபூ கினான் கூறுகிறார்.
சனிக்கிழமை மட்டும் சிரியா முழுவதும் 440 பேர் மரணித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஏராளமானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். ஆஸாத் பதவி விலக கோரி போராட்டம் துவங்கி ஒன்றரை வருடம் கழிந்துள்ள சூழலில் அதிகமானோர் கொல்லப்பட்ட நாளாக சனிக்கிழமை அமைந்தது. டமாஸ்கஸ் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் 310 பேர் பலியாகியுள்ளனர்.
எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு மிகுந்த அலப்போவில் 40 பேரும், சன்னி பழங்குடி பகுதியான தாருஸ்ஸூரில் 28 பேரும் பலியாகியுள்ளனர். இத்லிப், தேரா, ஹமா, ஹும்ஸ் ஆகிய நகரங்களில் மீதமுள்ள மரணங்கள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
தராயா பகுதியில் உள்ள அபூ சுலைமான் அல் தரானி மஸ்ஜிதில் 150க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கிடத்தப்பட்டிருந்த வீடியோ காட்சிகளை மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். சிரியாவில் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் உண்மையான புள்ளிவிபரங்கள் வெளியாகவில்லை. தராயாவில் இருந்து எதிர்ப்பாளர்களை துரத்தியதாக அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது.
சிரியா ரகசிய(விமானப்படை) உளவுத்துறையின் தலைவர் லெஃப்டினண்ட் ஹஸன் ஜமீல் கொல்லப்பட்டதாக அல் அரேபியா சானல் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்ப்பாளர்களின் ஃப்ரீ சிரியா ஆர்மியுடன் ஒத்துழைக்கும் அஃப்ஹத் அர் ரசூல் என்ற அமைப்பின் மெய்க்காவலர், ஹஸன் ஜமீலை கொலைச் செய்துள்ளார். அலவி பிரிவைச் சார்ந்த ஹஸன் ஜமீல் சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதின் நெருங்கிய ஆலோசகரில் ஒருவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக