வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

கிரீஸ் பிரதமர் மீண்டும் கையேந்தியுள்ளதால், பிரான்ஸ், ஜெர்மன் அதிபர்கள் அவசர ஆலோசனை !

கிரீஸ் நாட்டின், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலும், பிரான்ஸ் அதிபர் ஹோலன்டும் நேற்று, பேச்சு வார்த்தை நடத்தினர்.ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 17 நாடுகளில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ளன. இதில் கிரீஸ் நாடு, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ, அரசு வாகனங்களை இயக்க எரிபொருள் நிரப்பவோ கூட, நிதியின்றி
தவிக்கிறது. உள்ளூர் வங்கிகள் மூடப்பட்டு விட்டன. சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால் சில நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டன.
நிதி நெருக்கடியை சமாளிக்க, தகுதிக்கு மீறி, கிரீஸ், உலக வங்கியிடமும், ஐரோப்பிய வங்கியிடமும் கடன் வாங்கி விட்டது. நாட்டின் நிதி நிலையை சமாளிக்க,மேலும் 161 பில்லியன் டாலர் தேவைப்படுவதாக கிரீஸ் பிரதமர் அந்தோணி சமராஸ் தெரிவித்துள்ளார்.மானிய உதவி, மற்றும் பல சலுகைகளை நிறுத்தும் படி ஜெர்மனும், பிரான்சும், கிரீசுக்கு அறிவுறுத்தி கொண்டே இருக்கின்றன. கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க இன்னும் கொஞ்ச கால அவகாசம் கேட்கிறது கிரீஸ்.
"கால அவகாசம் கேட்க கேட்க நிதி சுமை அதிகரிக்கத்தான் செய்யும்' என, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கண்டனம் தெரிவித்துள்ளார்.யூரோ கரன்சியை பயன்படுத்தும் நாடு என்ற, முறையில் கிரீசுக்கு தொடர்ந்து நிதி உதவி செய்து வருகின்றன பிரான்சும், ஜெர்மனியும்.
கிரீஸ் பிரதமர் மீண்டும் கையேந்தியுள்ளதால் அடுத்த கட்ட உதவி செய்வது குறித்து, பெர்லின் நகரில், பிரான்ஸ் அதிபர் ஹோலன்டும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலாவும் நேற்று, விரிவாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து கிரீஸ் பிரதமருடன், இந்த வார இறுதியில், இந்த தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக