வெள்ளி, நவம்பர் 25, 2011

ஈராக் கிராமமாக மாறும் சதாம் ஹுசைன் கிராமம்!!!

சதாம் பெயரில் விளையாட்டரங்கு
ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை நினைவு கூருமுகமாக இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றுக்கு வைக்கப்பட்டிருந்த அவரது பெயரை தற்போது மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ''சதாம் ஹுசைன் கிராமம்'' என்ற அந்த கிராமத்தின் பெயரை,
''ஈராக் கிராமம்'' என்று மாற்றுவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு அரசாங்க அதிபரின் நடவடிக்கைக்காக அது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
1978ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் சூறாவளியின் தாக்குதலுக்கு இலக்கானது.
சூறாவளித் தாக்குதலுக்கு இலக்கான ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு மாதிரிக் கிராமமொன்றை அமைத்துக் கொடுக்க அன்றைய ஈராக் அரசாங்கம் முன்வந்தது.
பள்ளிவாசல், மதரஸா மற்றும் விளையாட்டு மைதானம் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கிராமம் அன்றைய ஈராக் அதிபர் “சதாம் ஹுசைன்” கிராமம் என்ற பெயரில் 1982ம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.
தற்போது சதாம் ஹுசைன் மரணமடைந்து, ஈராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இக்கிராமத்தின் பெயர் மாற்றம், குறிப்பாக அங்குவாழும் மக்களிடையே வாதப் பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளதை அறிய முடிகின்றது.
ஏற்கனவே 1990ஆம் ஆண்டுவரை தமது கிராமத்தின் பள்ளிவாயல் மற்றும் மதரஸாவுக்கு மாதாந்தம் ஈராக் அரசாங்கம் உதவிவந்தததையும், அந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை காரணமாக அந்த உதவிகள் நிறுத்தப்பட்டதாக அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாசல் தலைவரான முகம்மட் லெப்பை அப்துல் வத்தீப் கூறுகின்றார்.
அண்மையில் தமது கிராமத்திற்கு வந்த ஈராக் குழுவொன்று தொடர்ந்தும் அந்த உதவிகளை வழங்க பெயர் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்
தமது கிராமத்திற்கு ஈராக் உதவி மீண்டும் கிடைக்கவேண்டுமென்பதற்காகவே இந்த முடிவை தாம் எடுத்ததாக கூறும் அவர், ஆனால் தமது கிராம மக்கள் மறைந்த சதாம் ஹுசைனை என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக