புதன், நவம்பர் 23, 2011

டேம் 999 மலையாளப் படத்துக்கு எதிராகப் போராட்டம்


முல்லைப் பெரியார் அணைதமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையிலான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, இப்போது திரைப்படி வடிவில் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில்

 வரும் வெள்ளிக்கிழமை திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மாலுமியான சோஹன் ராய் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பழமையான ஓர் அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து.
ஏற்கெனவே, முல்லைப் பெரியாறு அணையை மையமாகக் கொண்டு, டேம்ஸ் என்ற பெயரில் சோஹன் ராய் தயாரித்த குறும்படம், ஹாலிவுட்டில் விருது பெற்றது.
ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், 136 அடி வரை நீரைத் தேக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஆனால், தமிழகத்தின் தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான ஆதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு கோரி வருகிறது. இதுதொடர்பாக, தற்போது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இன்னொரு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந் நிலையில், இந்தப் படம், முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் கேரள அரசின் பிரசாரம் என்றும், அதை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

வன்முறை

செவ்வாய் மாலை, சென்னையில் அந்தத் திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு இயக்குநர் சோஹன் ராய் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே, மதிமுக உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்த இடத்துக்குச் சென்று வன்முறையில் ஈடுபட்டதால், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவில்லை.
இதனிடையே, இந்தப் பிரச்சினை குறித்து, சென்னையில் உள்ள இயக்குநர் சோஹன் ராயைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ``இந்த சர்ச்சை முட்டாள்தனமானது. கேரள அரசு இந்தப் படத்தைத் தயாரிக்க உதவுகிறது என்றும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. இந்தப் படத்தை, சர்வதேச கண்ணோட்டத்தில் தயாரித்திருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. படத்தைப் பார்க்காமல் இவ்வாறு புகார் கூறுவது ஏற்கத்தக்கதல்ல,’’ என்றார் சோஹன் ராய்.
படத்தைத் திரையிட எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அடுத்த நடவடிக்கை என்ன என்று அவரிடம் கேட்டபோது, ``நாங்கள் படத்தைத் திரையிடுவதை நிறுத்திக் கொள்ளத் தயார். அதற்கு முன்னதாக, தமிழக மக்கள், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். அது தமிழக நலனுக்கு எதிராக உள்ளது என்று அவர்கள் முடிவு செய்தால், படத்தைத் திரையிடுவதை நிறுத்திக் கொள்கிறேன். ஆனால், பார்த்த முடிவு செய்ய வேண்டும்,’’ என்றார் சோஹன்.




அந்தப் படத்தைப் பார்த்தால், தமிழர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என அவர் நம்பிக்கையுடன் கூறினார்``அந்தப் படத்தைப் பார்த்தால், தமிழர்கள் கூட பழைய அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்நாட்டுக்கு அதிக நீர் தேவை. கேரளத்தில் அதிக தண்ணீர் இருக்கிறது. அதை புதிய அணை, பெரிய அணையாகக் கட்டி அதிலிருந்து தண்ணீர் எடுக்கலாமே. பழைய அணையை ஏன் வைத்திருக்க வேண்டும். கடந்த 9 மாதங்களில் 22 முறை அந்தப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எந்த நேரத்திலும் அந்த அணை உடைந்துவிடலாம். அந்த அணைக்கு அருகில்தான் எனது வீடும் கூட உள்ளது. அணை உடைந்தால் 25 லட்சம் மக்கள் உயிரிழந்துவிடுவார்கள். பழைய அணை, நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் கட்டப்படவில்லை. புதிய அணையை அத்தகைய தொழில்நுட்பத்துடன் கட்ட வேண்டும்.ஆனால், அந்தப் படத்தில், முல்லைப் பெரியாறு அணையின் பெயரை நேரடியாகச் சொல்லவில்லை,’’ என்றார் சோஹன் ராய்.
இந்தப் படத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டாலும், நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழக முதல்வர் உள்பட யாரை வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் சோஹன் ராய் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தப் படத்தைத் திரையிடுவதை நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக