திங்கள், நவம்பர் 28, 2011

கனிமொழிக்கு கிடைத்தது நிபந்தனை ஜாமீன்

புதுடெல்லி: 2ஜி வழக்கில் எம்பி கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு விடுதலை ஆகிறார் கனிமொழி. இதுமட்டுமின்றி 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட சரத்குமார்  உட்பட 5 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால் சித்தார்த் பெஹூராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மட்டும் ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.


திமுக தலைவர் கருணாநிதி மகிழச்சி!

எம்பி கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதியிடம் கேட்டதற்கு, 'கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறினார். மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்து வேறு எந்த ஒரு கேள்விக்கும் திமுக தலைவர் மு.கருணாநிதி கருத்து சொல்ல விரும்பவில்லை.

முன்னதாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார், பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கரீம் மொ ரானி, ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பால்வா, குசேகான் புருட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர் ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால், தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அவற்றை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து இந்த 6 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை டிசம்பர் 1ம் தேதி விசாரிப்பதாக நீதிபதி வி.கே. ஷாலி அறிவித்தார். இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா உட்பட 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் எம்பி கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதே நேரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுராவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்ததால், அவரது மனு மீதான விசாரணை நாளையும் தொடர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக