திங்கள், நவம்பர் 21, 2011

கட்ஜு கூறியதில் என்ன தவறு?

கட்ஜு
ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு இந்திய ஊடகத் துறையை  அதிலும் குறிப்பாக பத்திரிகைத்துறையை குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்துறையின் ஒரு சாராரை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.கட்ஜு அரசு ஏஜண்டு என்று கூட விமர்சிக்கும் சில மூத்த பத்திரிகை விமர்சகர்கள் அவர் கூறிய முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை புறக்கணிக்கவோ அல்லது உண்மை தெளிவாக தெரிந்த பிறகும் அதனை கண்டும் காணாதது போல் நடிக்கவோ செய்கின்றனர். .

இந்திய மீடியா, பாராட்டத்தக்கதொரு பணியை நிறைவேற்றுகிறது என்ற உண்மையை கட்ஜு மட்டுமல்ல யார் மறுத்தாலும் அதனை அங்கீகரிக்க முடியாது. பொதுத்துறையில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொணர்வதில் மீடியா வகிக்கும் பங்கு மகத்தானது. முன்பு போபர்ஸ் ஊழல், பா.ஜ.க ஆட்சியில் நடந்த ஊழல்கள், தற்போதைய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகியவற்றை வெட்ட வெளிச்சமாக்கியதில் மீடியா இன்றியமையாத பங்கினை வகித்தது.
குஜராத்  மாநிலத்தில் மோடியின் தலைமையில் இந்திய வரலாறு காணாத அளவுக்கு நடத்த இனப்படுகொலையின் கோரங்களையும், போலி என்கவுண்டர்களின் உள்ளக்கிடக்கைகளையும் வெளிக்கொணர்ந்த டெஹல்கா பத்திரிகையின் பணி, பத்திரிகை துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டியது ஆகும்.
ஆனால், கட்ஜு கூறியதிலும் பல மறுக்கமுடியாத, மறைக்கமுடியாத உண்மைகள் அடங்கியுள்ளன. விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதில் பத்திரிகைகள் தொடர்ந்து தவறிழைத்து வருகின்றன. சமூக கடமையை நிறைவேற்றுவதில் ஊடகங்கள் தோல்வியை சந்தித்து வருவதாக பொதுவான குற்றச்சாட்டு உண்டு. மேலும் வாசகர்களின் மூட நம்பிக்கையை விற்று காசாக்குவதில் அவை முன்னணியில் உள்ளன. வார ராசிபலன்கள், குட்டிச்சாத்தானின் கதைகள் என மூடத்தனத்தின் உச்சத்திற்கு வாசகரை அழைத்துச் செல்லும் ஊடகங்கள் நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பதை பெரும்பாலும் மறந்துவிட்டு பணியாற்றி வருகின்றன.
கிரிக்கெட் மீதும், பாலியல் மற்றும் வன்முறைகள் நிறைந்த திரைப்படங்கள் மீதும் வாசகர்களுக்கு மோகத்தை அதிகரிப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கினை ஆற்றி வருவதையும் யாரும் மறுக்கமடியாது. வறட்சியினால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பு, விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சி, விவசாய நிலங்களின் ஆக்கிரமிப்பு போன்றவை எல்லாம் ஊடகங்களின் கண்களில் தென்படாது. விதர்பாவிலோ அல்லது இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியிலோ விவசாயிகள் கூட்டாக தற்கொலைச் செய்யும் வேளையில் மட்டுமே அவை செய்திகளை பிரசுரிக்கின்றன. அதுவும் பெரும்பாலும் 24 மணிநேரம் மட்டுமே. ஆனால், ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் தரித்தது முதல் அவர் பிரசவத்திற்காக லேபர் ரூமில் பிரவேசிக்கும் வரையும், பிரசவத்திற்கு பிறகு குழந்தை ஆணா? பெண்ணா? உள்ளிட்ட செய்திகளை நேரடியான ரிப்போர்ட்டுகளுடன் உடனுக்குடன்  வெளியிடுவதுதான் பத்திரிகைகளுக்கு பிடித்தமான விஷயமாகும்.
இளவரசி டயானாவும், பாகிஸ்தானின் பெனசிர் பூட்டோவும் வாழ்ந்திருந்த காலத்தில் அவர்களுடன் தொடர்புடைய செய்திகளை தேசரீதியிலான, புவியியல் ரீதியிலான எல்லைகளையும் கடந்து சென்று வெளியிடுவதில் பத்திரிகைகள் போட்டிப்போட்டன.
சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானியின் வருகையின்போது அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை விட அவர் அணிந்திருந்த விலை உயர்ந்த தயாரிப்புகளைக் குறித்தும், காஸ்மெட்டிக் பொருட்களைக் குறித்தும் அலசுவதிலே பல ஊடகங்களும் அலாதியான கவனத்தை செலுத்தின.
இளைய தலைமுறைக்கு விருப்பமானது எனக்கூறி சென்சேஸனலிஸத்தை (sensationalism) – அதாவது பரபரப்பான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நியாயப்படுத்துகின்றன. ஆனால், அவ்வேளைகளில் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றான பத்திரிகைத்துறையின் பொறுப்பை நாம் வேண்டுமென்றே சிதைக்கிறோம் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
மேற்கத்திய பத்திரிகைகளின் பின்னால் ஓட துடிக்கும் இந்திய ஊடகங்களின் செயல், பெரும்பாலான வறுமையில் வாடுவோரை குடிமக்களாக பெற்றிருக்கும் இந்திய தேசத்தில் ஆபத்தையே உருவாக்க உதவும். ஜனநாயக அமைப்பில் ஊடகம் என்பது பலகீனர்களின் குரலாகும். பகுத்தறிவையும், பண்பாட்டையும், நாகரீகத்தையும் உருவாக்குவதிலும், அநீதங்களையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதிலும் முன்னணியில் நிற்க நமது ஊடகங்கள் தயாராக வேண்டும்! ஆனால் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, சுய கட்டுப்பாட்டையும்(self regulation) இழந்துவிட்டு கட்ஜுவை சாடுவதில் என்ன நியாயம் உள்ளது?
அ.செய்யது அலீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக