ஞாயிறு, மார்ச் 23, 2014

கினியாவில் எபோலா நோய்த்தாக்கம்: பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு


மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவிலும் மற்றும் அதன் எல்லைப் பகுதியான சியாரா லியோனிலும் பரவியுள்ளது இரத்த சோகை நோய்க்காய்ச்சலான எபோலா என்பது உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது. மனிதர்களிடத்தில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கடுமையான காய்ச்சலான இதில் இறப்பு எண்ணிக்கையும் 90 சதவிகிதமாக இருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. 

கினியாவின் தென்கிழக்கு நகரங்களிலும், தலைநகர் கொனக்ரியிலும் கடந்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக 59 இறப்புகள் உட்பட 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னால் இது போன்றதொரு நோய்த்தாக்கம் கினியாவில் பதிவு செய்யப்பட்டதில்லை என்பதும் அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் லியான் சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்ட 12 ரத்த மாதிரிகளில் 6 முடிவுகள் இந்தக் காய்ச்சலை உறுதி செய்துள்ளன என்று கினியாவின் சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் தலைவரான டாக்டர் சகோபா கெய்ட்டா குறிப்பிட்டார். இதுதவிர கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற பிற வடிவங்களும் இறப்புகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

கினியாவிலும், சியாரா லியோனிலும் நடைபெற்றுள்ள சம்பவங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு போன்ற ஒரேமாதிரியான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக உலக சுகாதாரக் கழகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டில் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளும் நோய் கட்டுப்பாட்டு மையத்தில் ஒப்பிடப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக