வெள்ளி, மார்ச் 28, 2014

தேர்தல் அதிகாரி புகாரை வாங்க மறுத்த போலீசார்:அதிமுகவினருக்கு சாதகமாக செயல்படுபடுவதாக குற்றச்சாட்டு

கூம்பு வடிவ குழாய் மூலம் அதிமுகவினர் பிரசாரம் செய்வதாக, தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரை உள்ளூர் போலீசார் வாங்க மறுத்துவிட்டனர். இது குறித்து அவர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பி உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, சமக தலைவர் சரத்குமார், நேற்று முன்தினம் மாலை திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த இடத்தில், தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ள கூம்பு வடிவிலான குழாய்கள் மூலம் பாடல்களை ஒலிபரப்பினர்.


தகவலறிந்து நந்தனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிறப்பு தாசில்தாரும், தேர்தல் அலுவலருமான ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதிமுகவினரை எச்சரித்ததுடன் கூம்பு வடிவிலான குழாயை அகற்றும்படி கூறினர். அதற்கு திருநீர்மலை பேரூர் அதிமுக செயலாளர் சுபாஷ், ‘‘குழாயை அப்புறப்படுத்த முடியாது, என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’’ என ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை, தேர்தல் அதிகாரிகள் வீடியோ எடுத்தனர்.

கூம்பு வடிவ குழாயை அகற்றாததால் தகுந்த ஆதாரங்களுடன் குரோம்பேட்டை போலீசில் தேர்தல் அதிகாரி ஜெயகுமார் புகார் செய்தார். ஆனால், இன்ஸ்பெக்டர் வரட்டும்,  எஸ்ஐ வரட்டும்டும் என கூறி புகாரை போலீசார் வாங்க மறுத்தனர். அவர்கள் வந்த பிறகும் புகாரை வாங்கவில்லை. உதவி கமிஷனர் வரட்டும் என கூறினர். நீண்ட நேரத்துக்கு பிறகு உதவி கமிஷனர் வந்தார். இதையடுத்து, சுமார் 2 மணி நேரத்துக்கு பின் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் எந்த ஒரு புகாரை கொடுத்தாலும், 2 நாள் கழித்து தான் போலீசார் புகாரை விசாரிப்பார்கள். தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகும் போலீசார் கட்சிக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். தேர்தல் அதிகாரியாக புகார் கொடுத்தவர், ஒரு மாஜிஸ்திரேட் பதவி உடையவர். அவரையே போலீசார் அலைக்கழிக்கும்போது எங்களை போன்ற பாமர மக்களுக்கு என்ன கதி என காவல்துறை உயர் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக