திங்கள், மார்ச் 31, 2014

பயனாளிகளுக்கு தாமதமின்றி முதியோர் ஓய்வூதியம்: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

முதியோர், ஆதரவற்றோர், விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை. ஓய்வூதியத் தொகையினை தாமதமின்றி வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பு அமைப்பான எஸ்.டி.டி.யூ. அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அமைப்பின்  தலைவர் நசீர்கான் தலைமையில் நடைபெற்றது.
தேர்தல் பணிக்குழுத் தலைவர் ஐ. உஸ்மான்கான், தொழிற்சங்க மாவட்டச்செயலர் அப்துல், துணைத் தலைவர் சுந்தர்ராஜன், கட்சியின் மாவட்டத் தலைவர் பிஸ்மி காஜா, தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அஷீக், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் முகம்மதுமுபாரக் உள்ளிட்டோர் பேசினர்.
தீர்மானங்கள்: கட்சி சார்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முகம்மதுமுபாரக் வெற்றி பெற தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபடுவது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பீடித் தொழிலாளர்கள் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும்.
பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பெரும்பாலான மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. அனைத்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.
ஆதரவற்றோர், முதியோர், விதவைகளுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதியத் தொகை கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை. ஆகவே பயனாளிகளுக்கு தாமதம் இன்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுதிச் செயலர் ஆலிம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக