செவ்வாய், மார்ச் 25, 2014

நாடாளுமன்ற தேர்தல்:செவ்வக வடிவ நோட்டா சின்னம் அறிமுகம்!

நோட்டாவுக்கான சின்னத்தை தற்போது இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. ஓட்டு எந்திரத்தில் உள்ள கடைசி பட்டனாக நோட்டா இருக்கும். நோட்டா சின்னம், நான்கு முனைகளும் மடங்கிய செவ்வக வடிவத்தில் காணப்படும்.

அந்த செவ்வகத்துக்குள் நோட்டா என்ற ஆங்கில எழுத்து வெள்ளை நிறத்தில் கறுப்பு பின்புலத்தில் எழுதப்பட்டு இருக்கும். 

சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு எந்திரங்களில் ஒட்டப்படும் வேட்பாளர் பட்டியல் சீட்டு, பிங்க் வண்ணத்தில் இருக்கும் என்பதால், அதற்கான ஓட்டு எந்திரங்களில் நோட்டா எழுத்து, ஆங்கிலத்தில் பிங்க் நிறத்தில், கறுப்பு பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும்.அதுபோல் ஓட்டு எந்திரத்தில் ஒட்டப்படும் வேட்பாளர் பட்டியல் சீட்டில், ‘‘மேற்காணும் நபர்களில் எவருமில்லை’’ என்று நோட்டா சின்னத்துக்கு முன்பு தமிழில் எழுதப்பட்டு இருக்கும்.

வேட்பாளர் பட்டியல் சீட்டு எந்த மொழியில் அச்சடிக்கப்படுகிறதோ, அந்த மொழியில்தான் நோட்டா சின்னத்துக்கான வார்த்தைகள் (தமிழில், மேற்காணும் நபர்களில் எவருமில்லை) அச்சடிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

ஓட்டு எந்திரத்தின் வேட்பாளர் பெயர் வரிசையில், கடைசி வேட்பாளர் பெயருக்கு அடுத்தபடியாக, ‘‘மேற்காணும் நபர்களில் எவருமில்லை’’ என்ற எழுத்தும், அதையொட்டி நோட்டா சின்னமும் இடம் பெற்றிருக்கும். வேட்பாளர்களின் சின்னங்கள் வரிசையில், நோட்டாவுக்கான இடம் காலியாக இருக்கும்.

வாக்காளர் அனைவருமே ஓட்டுச்சாவடிக்கு வாக்களிப்பதற்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரைக்கூட பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நோட்டாவின் பட்டனை அழுத்திச்செல்லுங்கள். ஆனால் ஓட்டுகள் வீணாக போகச்செய்துவிடாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக