வெள்ளி, மார்ச் 28, 2014

தேர்தல் துறைக்கும், தமிழக அரசுக்கும் இடையே மீண்டும் ஒரு பிரச்சினை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநந்திக்கரை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டி ருந்தார்.

அப்போது அவரது ஆதரவாளர் வீட்டில் கறி விருந்து அளிக்கப்படுவதாக தேர்தல் துறையினருக்கு எதிர்க்கட்சியினர் தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வீடியோ கண்காணிப்புப் படையினர், விருந்தை படம் பிடிக்கத் தொடங்கினர். அதிமுக தரப்பிலோ, அந்த ஊரில் ஹோட்டல் இல்லாததால், அங்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்துள்ளனர்.அப்போது அதிகாரிகளை வேட்பாளர் ஜான் தங்கம், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டவர்கள் மிரட்டியதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக வேட்பாளர் ஜான் தங்கம், தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் மீது குலசேகரம் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அடுத்த நாளே அதிமுகவைச் சேர்ந்த மனோகரன் என்பவர், தனது வீட்டுக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மிரட்டியதாக போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுளளது.இதனால் மற்ற அதிகாரிகள், தேர்தல் களத்தில் தீவிர பணியில் ஈடுபடத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தினரின் கவனத்துக்கு வந்துள்ளது. ஆட்சியரிடம் அச்சம்பவம் பற்றி அறிக்கை கேட்கப்பட்டது. அவரும் அதனை அனுப்பி வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்திடம் இப்பிரச்சினையைக் கொண்டு செல்ல தேர்தல் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

மாநகர சிறிய பஸ்களில் இலை படத்தை அகற்றும் விவகாரம் முடிந்துள்ள நிலையில், தற்போது தேர்தல் துறைக்கும், தமிழக அரசுக்கும் இடையே மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக