பாராளுமன்ற தேர்தல் தேதிக்கு 5 நாட்களுக்கு முன்பே வீடு, வீடாக சென்று ஓட்டு சாவடி சீட்டுகளை வழங்க வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு இருக்கிறார்.
ஓட்டு சாவடி சீட்டு
தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுசாவடி சீட்டு வழங்கப்படுவது வழக்கம். அதில் வாக்காளர்களின் புகைப்படம், பெயர், முகவரி, பாகம் எண், ஓட்டு சாவடி பெயர் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த ஓட்டு சாவடி சீட்டு (பூத் ஸ்லிப்) தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதனை தேர்தல் தேதிக்கு 5 நாட்களுக்கு முன்பாக வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விநியோகிக்க வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–
பதிவேட்டில் கையெழுத்து
பொது மக்களுக்கு ஓட்டு சாவடி சீட்டுகளை தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே வீடு, வீடாக சென்று முறையாக வழங்க வேண்டும். அச்சிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஓட்டு சாவடி சீட்டு, ஓட்டு சாவடி அலுவலர் மேற்பார்வையில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஓட்டு சாவடி சீட்டு தரமான காகிதத்தில் அச்சிடப்பட வேண்டும். அதில் வாக்காளர்களின் புகைப்படம் தெளிவாக இடம் பெற வேண்டும். ஓட்டு சாவடி சீட்டை சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவரது வீட்டில் உள்ள வயது வந்தோரிடம் ஒப்படைக்க வேண்டும். சீட்டு பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாக பதிவேட்டில் கையெழுத்து பெற வேண்டும். வாக்காளர் இல்லாமல் வீடு பூட்டி இருந்தால் அவரது சீட்டை தனி நோட்டில் ஓட்டி வைக்க வேண்டும்.
கேமரா, செல்போனுக்கு தடை
வாக்காளர்கள் அன்றைய தினம் வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்றால் ஓட்டு சாவடி அலுவலர் நோட்டை சரிபார்த்த பிறகு ஓட்டளிக்க அனுமதிக்கலாம். ஓட்டுசாவடி சீட்டு வழங்கப்பட்ட விவரம் அரசியல் கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச் சாவடி ஏஜெண்டுகளுக்கும், வேட்பாளரின் ஏஜெண்டுகளுக்கும் வழங்க வேண்டும்.
இந்த சீட்டுகளை மொத்தமாக ஒருவரிடம் ஒப்படைத்து வினியோகிக்க கூடாது. வினியோகிக்கப்படாத சீட்டுகளை உதவி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஓட்டு சாவடி சீட்டு கிடைக்காதோர் உதவி தேர்தல் அலுவலரை சந்தித்து வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
சீட்டின் பின்புறம் ஓட்டு சாவடிக்குள் கேமரா, செல்போன் போன்றவற்றை எடுத்து செல்லக்கூடாது போன்ற விவரங்கள் அச்சிடப்பட வேண்டும். ஓட்டு சாவடி சீட்டை நகல் எடுத்து வினியோகிக்க கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக