புதன், மார்ச் 26, 2014

விமானத்தை தேடும் பணியில் 122 பொருட்கள் கண்டுபிடிப்பு

மார்ச் 8-ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. சில நாட்களுக்கு முன்பு இவ்விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக மலேசிய பிரதமர் அறிவித்தார். இந்நிலையில் தேடும் பணியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டின் செயற்கைக்கோள் மூலம் இப்போது புதிய படங்கள் வெளியாகி உள்ளன.

விமானம் விழுந்ததாக கூறப்படும் இந்திய பெருங்கடலின் ஒரு பகுதியில், 400 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 122 பொருட்கள் பிரான்ஸ் செயற்கைக்கோளால் கண்டறியப்பட்டுள்ளன. இது விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் படங்கள் கிடைத்ததை உறுதி செய்த மலேசிய போக்குவரத்து துறை மந்திரி, “இது விபத்திற்குள்ளான விமானத்தின் பாகங்கள் தான் என்பதை உறுதியாக கூறமுடியாது. விமானத்தை தேடும் போது இது ஒரு கூடுதல் தகவலாக கிடைத்துள்ளது. இந்த படங்கள் தேடுதல் பணி நடைபெறும் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இதேபோல் இந்திய பெருங்கடலில் பொருட்கள் மிதப்பது போன்று ஆஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்சில் இருந்து ஏற்கனவே செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், தேடுதல் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக