திங்கள், மார்ச் 31, 2014

இலங்கை மாகாணத் தேர்தல்:ராஜபட்ச கட்சி வெற்றி

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாண கவுன்சில் தேர்தல்களில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாண கவுன்சில்களுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தெற்கு மாகாணத்தில் மொத்தமுள்ள 55 இடங்களில் அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 33 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. எனினும் 2009ஆம் ஆண்டு மாகாண கவுன்சில் தேர்தலில் பெற்ற 38 இடங்களை விட இது குறைவாகும். மீதமுள்ள 22 இடங்களை மூன்று எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
ராஜபட்சவின் சொந்தத் தொகுதியான அம்பணத் தோட்டத்தில் ஆளும் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பது அவருக்கு ஒரு கசப்பு மருந்தாகவே இருக்கும். ஏனெனில் அவர் அடுத்த ஆண்டு (2015) நடைபெறும் அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட உள்ளார்.
மேற்கு மாகாண கவுன்சில் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 104 இடங்களில் ஆளும் கூட்டணி 68 இடங்களைக் கைப்பற்றியது. எனினும் 2009 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அக்கட்சி 12 இடங்களை இழந்துள்ளது. அந்த மாகாணத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 28 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி 9 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே மூன்றாவது இடத்தில் இருந்த ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி இம்முறை நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக