இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன் பிடித்தமைக்காக கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் சென்ற முறை இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்த இந்தியா இம்முறை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விலகியிருந்தது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி தலையீடு நிகழும்போது, அது உள்ளக நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை பாதிப்பதாக அமையும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.
ஐ.நா.பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் அதற்கான வாக்கெடுப்பின் மீது ஒதுங்கியிருந்த இந்தியா மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக இரு நாட்டின் மீனவ பிரதிநிதிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டைகளை சந்தித்துள்ளன.
இந்நிலையில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மீன்பிடி துறை அமைச்சர் கண்டிப்பாக அறிவித்திருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தடுத்தவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம், மன்னார் சிறைச்சாலைகளில் 98 இந்திய மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக