வெள்ளி, மார்ச் 21, 2014

ஆடம்பர வாழ்க்கைக்காக ரூ.2 கோடி சுருட்டல்: வங்கி பெண் அதிகாரிக்கு சிறை

பிரிட்டைனின் எடின்பர்க் நகரின் வடபகுதியில் இருந்து சுமார் 12 மைல் தொலைவில் உள்ள கிர்கால்டி நகரில் இருக்கும் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து வங்கியின் கிளை உள்ளது. இந்த கிளையில் வாடிக்கையாளர் தொடர்பு மைய அதிகாரியாக ஜுலி ஃபிரேசர் என்ற பெண்மணி 35 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

தனது பதவியை தவறாக பயன்படுத்தி கடந்த 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளுக்கிடையில் 4 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து 26 பரிவர்த்தனைகளின் மூலம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 315 பவுண்டுகளை (இந்திய மதிப்புக்கு சுமார் 2 கோடியே 20 லட்சம் ரூபாய்) இவர் சுருட்டியது தெரிய வந்தது. இதில் ஒரே வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் பவுண்டுகளை இவர் சூறையாடியது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜுலி ஃபிரேசர், மகளை நல்ல மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர்க்கவும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு இந்த தவறை செய்து விட்டதாக தெரிவித்தார்.

மோசடி செய்த தொகையை இவரது ஓய்வுக்கால பலன் தொகையில் இருந்து வங்கி அதிகாரிகள் பிடித்தம் செய்தனர்.

இவ்வழக்கில் ஜுலி ஃபிரேசருக்கு 3 ஆண்டு தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ‘வங்கிகளில் தங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையில் தான் மக்கள் இங்கு சேமித்து வைக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை நீங்கள் முறியடித்து விட்டீர்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக