ஞாயிறு, மார்ச் 23, 2014

ஏர் ஏசியா நிறுவனத்தின் முதல் ஏர் பஸ் விமானம் சென்னை வந்தது


வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவில் அதிகரிக்க உதவும் திட்டத்தின் கீழ் இந்தியாவின் டாடா குழுமமும், அருண் பாட்டியாவின் டெலிஸ்டிரா டிரேட்பிளேசும் மலேசியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுடன் இணைந்து இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளை இயக்கும் உரிமத்தை பெற்றுள்ளன. சென்னையை மையமாகக் கொண்டு இயங்க உள்ள இந்த நிறுவனத்துக்கான முதல் ஏ320 ஏர் பஸ் விமானம் நேற்று சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.


இந்திய உள்நாட்டு சேவைகளுக்கான விமானங்களின் வரிசையில் முதல் விமானத்தை ஏர் ஏசியா இன்று பெற்றுள்ளது என்று நேற்று நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் ஏர் பஸ் நிறுவனம் தெரிவித்தது. ஷார்க்லெட்ஸ் வசதிகளும், புதிய சிஎப்எம் பவர் என்ஜின்களும் பொருத்தப்பட்ட இந்த விமானங்களில் 180 பயணிகள் செல்லக்கூடிய வசதி உண்டு. இதுபோன்று இன்னும் ஒன்பது விமானங்கள் இந்த நிறுவனத்தால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்றும் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய இந்த விமானப் பிரிவினைக் கொண்டு உலகின் மற்ற பிராந்தியங்களில் வழங்கப்படுவது போன்ற சிறந்த சேவைகளையும், தரமான பயண விருப்பங்களையும் இந்திய பயணிகளுக்கு எங்களால் வழங்க முடியும். இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறிப்பிடத்தக்க விகிதத்தில் வளர்ந்து வருகின்றது. நன்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள வெற்றிகரமான எங்களின் வணிக வர்த்தகம் இந்திய சந்தைக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று ஏர் ஏசியா இந்திய பிரிவின் முக்கிய நிர்வாக அதிகாரி மிட்டு சாண்டில்யா தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக