வங்கதேசத்தில் நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டிகளின் கடைசி போட்டியில் இன்று நெதர்லாந்து திடீர் திருப்பமாக தாறுமாறாக அடித்து அயர்லாந்தை வீழ்த்தி பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றது. நெதர்லாந்தின் இந்த திடீர் எழுச்சியினால் முதலிடத்திலிருந்த ஜிம்பாவேயும் வெளியே தூக்கி எறியப்பட்டது. ஏற்கனவே இந்தியா இருக்கும் பிரிவில் வங்கதேசம் தகுதி பெற்றது. மற்றொரு பிரிவுக்கு தற்போது நெதர்லாந்து தகுதி பெற்று வரலாறு படைத்தது.
அயர்லாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து பிரதான சுற்றுக்கு, அதாவது சூப்பர் - 10 அணியுடன் இணைய 14.3 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தால் தகுதி பெறும் நிலை. ஆனால் நடந்தது சற்றும் கண்களால் நம்ப முடியாத ஒன்று. 13.5 ஓவர்களில் 194/4 என்று அபார வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.
அதுவும் வெற்றி பெற 3 ரன்கள் தேவை என்ற நிலையில் நெதர்லாந்து வீரர் பரேசி வெற்றிக்காக அடித்தாரே பார்க்கலாம் ஒரு சிக்சர் அதை கேமராவினால் பிடிக்க முடியவில்லை பந்து போய்க்கொண்டே இருந்தது மறைந்தது. நெதர்லாந்து வீரர்கள் மைதானத்தில் இறங்கி டான்ஸ் ஆடத் தொடங்கிவிட்டனர்.
இந்த 193 ரன்களில் நெதர்லாந்து 19 சிக்சர்களையும் 12 பவுண்டரிகளையும் விளாசியது. அதாவது 162 ரன்கள்!! ஏகப்பட்ட T20 சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அடுத்த பதிவில் விரிவாக பார்க்காலாம்.
இப்போது நெதர்லாந்து அடித்தது எப்படி? இதோ:
14.2 ஓவர்களில் தேவை 190 ரன்கள். நெதர்லாந்து துவக்க வீரர்கள் கேப்டன் பொரன், மற்றும் மைபர்க் ஆகியோர் இறங்கினர். முதல் பந்தே ஸ்டர்லிங் வீச லெக் திசை பந்து 4 ரன்கள். அந்த ஓவரில் ஸ்கோர் 9.
அதற்கு அடுத்த ஓவர்தான் பயங்கரம் ஆரம்பமானது. மெக்பிரைன் என்ற ஸ்பின்னரை போட அழைத்தார் அயர்லாந்து கேப்டன். முதல் பந்தை போரன் இறங்கி வந்து லாங் ஆனில் ஒரு சிக்ஸ். அடுத்த பந்து ஒரு ரன். இப்போது இடது கை மைபர்க் வந்தார் ஸ்ட்ரைக்கிற்கு. டீப் மிட்விக்கெட்டில் ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ். அதே பந்து அதே ஷாட் மேலும் சில அடிகள் தள்ளி சிக்ஸ். மீண்டும் அதே ஸ்ட்ரோக் இன்னும் சில அடிகள் தள்ளிப்போய் சிக்ஸ். 25 ரன்கள். 2 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 34.
அடுத்த ஓவர் முர்டாக் வந்தார் மீண்டும் மிட்விக்கெட்டில் சிக்ஸ் தூக்கினார் போரன். மீண்டும் மைபர்க் ஒரு பவுண்டரியை லெக் திசையில் அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள்மீண்டும் 4வது ஓவரில் கியுசக் என்ற பவுலர் வர மீண்டும் மைபர்க் புகுந்தார். லாங் ஆனில் ஃபிளாட் சிக்ஸ். அடுத்த பந்து புல் டாப் எட்ஜ் சிக்ஸ். அடுத்த பந்து சைட் ஸ்க்ரீனுக்கு மேல் பறந்து மாயமானது. மீண்டும் ஒரு பவுண்டரி 22 ரன்கள் 4 ஓவர்களில் 68/0
5வது ஓவரில் மீண்டும் 14 ரன்கள். 6வது ஓவரில் 2 பவுண்டரிகள் வர 15 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் கேப்டன் போரன் வெளியேறினார். பவர்பிளே முடிந்து 6 ஓவர்களில் நெதர்லாந்து 91/1. இது ஒரு உலக சாதனையாகும். ஆம் இது ஒரு புதிய T20 உலக சாதனை.
7வது ஓவரில் இடது கை அதிரடி வீரர் மைபர்க் 23 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்சர்கள் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். 8வது ஓவரில் வான் பீக் என்ற பேட்ஸ்மெனும் அவுட் ஆக 8 ஓவர்களில் 107/3 என்று இருந்தது நெதர்லாந்து. இன்னும் 38 பந்துகளில் தேவை 83 ரன்கள்.
அப்போது கூப்பர் மற்றும் பரேசி கிரீசில் இருக்கின்றனர். 11வது ஓவர் துவக்கம் தேவை 26 பந்தில் 58 ரன்கள். டாக்ரெல், இவர் நல்ல ஸ்பின்னர்தான் ஆனால் தனக்கு இப்படி அந்த ஓவரில் நடக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பாத்திருக்க மாட்டார்.டி.டபிள்யூ. கூப்பர் 4 சிக்சர்களை வரிசையாக அடித்தார். 25 ரன்கள் வர 20 பந்துகள் 33 ரன்கள் என்றானது. இந்த நிலையில் 15 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்சர்கள் விளாசி 300 ஸ்ட்ரைக் ரேட்டுடன் கூப்பர் 45 ரன்னில் அவுட் ஆனார். அதன் பிறகு பரேசி, பி.என். கூப்பர் இணைந்து நம்ப முடியாத வெற்றியை பெற்றுத் தந்தனர். பரேசி 40 நாட் அவுட். கூப்பர் 9 நாட் அவுட். ஆட்ட நாயகனாக மைபர்க் (63)தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக டாஸ் வென்று நெதர்லாந்து சாமர்த்தியமாக பீல்டிங்கை தேர்வு செய்தது. அயர்லாந்து அணியில் போர்ட்டர் பீல்ட் 47 ரன்கள் விளாசினார். கடைசியில் இறங்கி 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூரில் 50 பந்து சதம் அடித்து இங்கிலாந்தை மண்ணைக்கவ்வச்செய்த அதிரடி மன்னன் கெவின் ஓ பிரையன் 16 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்கள் 42 அடித்தார். பாய்ண்டர் என்ற வீரர் திடீர் அனாயாச வாள் சுழற்றி 57 விளாசினார். அயர்லாந்து 189 ரன்களை எட்டியது.
இப்போது இலங்கை, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசீலாந்து அணிகள் பிரிவில் நெதர்லாந்து பிரதான சுற்றில் விளையாடவுள்ளது. ஜிம்பாவே பரிதாப வெளியேற்றம் கண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக