திங்கள், மார்ச் 24, 2014

உலக கோப்பை டி20: இந்தியா அபார வெற்றி

உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 லீக் ஆட்டத்தில்,  நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 7 விக்கெட்  வித்தியாசத்தில் வென்றது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று  இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில்  பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் அணியால் முதல் 7 ஓவரில் வெறும்  33 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கேல் 34 ரன் எடுத்து ரன் அவுட்  ஆனார். ஓரளவு தாக்குப்பிடித்த சிம்மன்ஸ் 27 ரன் எடுக்க, மற்ற  வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்  எடுத்தது. ஜடேஜா 3, அமித் மிஷ்ரா 2, அஷ்வின் ஒரு விக்கெட்  வீழ்த்தினர். 

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற  எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான், ரோகித்  துரத்தலை தொடங்கினர். பத்ரீ பந்துவீச்சில் தவான் டக் அவுட்  ஆனார். ரோகித் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு அபாரமாக  விளையாடி 106 ரன் குவித்தது. கோஹ்லி 54 ரன் (41 பந்து, 5  பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். யுவராஜ் 10 ரன்னில்  வெளியேறினார். இந்தியா 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 130  ரன் எடுத்து தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தியது. ரோகித்  62 ரன் (55 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ரெய்னா 1 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக