வெள்ளி, மார்ச் 28, 2014

பஞ்சாயத்து உத்தரவின் பேரில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணுக்கு நஷ்டஈடு

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க மேற்கு வங்க மாநில அரசாங்கம் தவறிவிட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.தான் பிறந்த பழங்குடி சமூகம் சாராத ஆணை காதலித்த காரணத்தினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட அந்த 20 வயது பெண் தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அந்த கிராமத்தின் தலைவர் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.சந்தல் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இந்த பெண், அருகில் இருந்த பிர்பம் மாவட்டதை பழங்குடி சமூகம் சாராத ஆணொருவரைக் காதலித்ததற்காக அவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார் என மேற்கு வங்க மாநில காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
ஐந்து ஆண்டுகளாக அந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இந்தக் காதல் உறவு இருந்து வந்தது.காதல் புரிந்த குற்றத்திற்காக அவர்களுக்கு கிராமத்தின் தலைவரால் தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அந்த ஆண் அபராதப் பணத்தை கட்டிவிட்டதாவும், ஆனால் பெண்ணின் குடும்பத்தால் அந்த அபராதத் தொகையை கட்ட முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.பெண் குடும்பத்தால் தொகையை கட்ட முடியாத காரணத்தினால் அந்த பெண்ணின் தூரத்து உறவினரான கிராமத்தின் தலைவர் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கிராம பஞ்சாயத்து தீர்ப்புகள்

உள்ளூர் பெரியவர்களால் அமைக்கப்படும் சமூகம் சார்ந்த கிராம பஞ்சாயத்துகள் கிராமப்புற இந்தியாவில் வாழும் மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக உள்ளூர் மரபுகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
இந்த சம்பவம் இந்தியாவில் பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பையும் சீற்றத்தையும் எழுப்பியது.இது ‘மனிதாபிமானமற்ற செயல்’ என்று பல சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
2012 ஆம் ஆண்டில், டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி பலியான சம்பவம், இந்தியாவில் தொடரும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் கடுமையாக்கினாலும், சமூகம் இந்த சம்பவங்கள் குறித்து தற்போது வெளிப்படையாக விவாதித்தாலும், இந்தியாவில் பல பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு பயந்து வாழ்கின்றனர் என்பதே யதார்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக