ஞாயிறு, மார்ச் 23, 2014

பா.ஜனதா போலிகள் வசம்: பா.ஜனதா தலைமையை கடுமையாக சாடினார் ஜஸ்வந்த்சிங்


பா.ஜனதா கட்சி போலிகள் வசம் போய்விட்டது என்று ஜஸ்வந்த்சிங் கூறினார்.


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பார்மரில் போட்டியிட விரும்பிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு, அந்த கட்சி வாய்ப்பு மறுத்து விட்டது. மாறாக, சமீபத்தில் காங்கிரசில் இருந்து அந்த கட்சிக்கு தாவிய கர்னல் சோனாராம் சவுத்ரிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.இது, கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் தீவிர ஆதரவாளர் என கருதப்படுகிற ஜஸ்வந்த்சிங்குக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது. இதன் காரணமாக அவர் கட்சியிலிருந்து விலகி, பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஜோத்பூரில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தனக்கு பார்மரில் போட்டியிட டிக்கெட் வழங்காத பா.ஜனதா தலைமையை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

 எந்த மாற்று திட்டமும் ஏற்பதற்கு இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இப்போது கூறமுடியாது. நான் பார்மர் சென்று, எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன்.

சித்தாந்தங்களின் அடிப்படையிலான பாரதீய ஜனதா கட்சி, இப்போது அந்த சித்தாந்தங்களை இழித்துப்பேசுகிறவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதுதான் வேதனைக்கு உரியது.அத்தகைய சக்திகள் கையில் கட்சி முழுமையாக போய்விட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் கட்சியின் சித்தாந்தங்களை ஒருபோதும் மதிக்காதவர்கள்.

இப்போது பாரதீய ஜனதா கட்சி, இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது.இப்போது கட்சி தாவி வந்தவர்களுக்கு ரெயில் டிக்கெட், விமான டிக்கெட் கிடைப்பதைவிட தேர்தலில் போட்டியிட கட்சி டிக்கெட் எளிதாக கிடைத்து விடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக