திங்கள், மார்ச் 24, 2014

பிரசாரத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு: அதிமுக அமைச்சர், எம்.பி. ஓட்டம்

மணப்பாறை அருகே ஓட்டு கேட்க வந்த  தம்பித்துரை  எம்.பியை முற்றுகையிட முயன்ற கிராம மக்களை தாக்க முயன்றதாக  அதிமுகவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக  சார்பில் கரூர் தொகுதி வேட்பாளராக தற்போதைய எம்.பி. தம்பிதுரை  மீண்டும் போட்டியிடுகிறார். திருச்சி மாவட்டம் மணப்பாறை  ஒன்றியத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கருங்குளம் கிராமத்துக்கு  சென்றார். ஆனால், அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள்  பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி காலி  குடங்களுடன் தம்பிதுரையை முற்றுகையிட முயன்றனர். ஆனால்  தம்பிதுரையின் பிரசார வாகனம் மக்கள் திரண்டிருந்ததை பார்த்ததும்  நிற்காமல் வேகமாக, அருகே உள்ள ஊத்துக்கோட்டை கிராமத்துக்கு  சென்று விட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.

ஆனால், தம்பிதுரையுடன் இருந்த அதிமுகவினர் அங்கிருந்த  பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஒரு சிலர்  பொதுமக்களை தாக்க முயன்றனர். இதுபற்றி, வையம்பட்டி போலீசில்  பொதுமக்களில் சிலர் புகார் கொடுத்தனர்.  பொதுமக்கள் எதிர்ப்பால்  திரும்பி சென்ற அமைச்சர்: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட  பகுதிகளில் நேற்று காலை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன்,  வேட்பாளர் மோகன் மற்றும் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டனர். இந்நிலையில், லலிதானூர் கிராமத்தில் குடிநீர், சாலை  வசதி, வறட்சி நிவாரணம் ஆகியன உள்ளிட்ட எந்த அடிப்படை  வசதிகளும், நத்தம் காலனி பிரச்னையில் தொடர்பில்லாதவர்களை  கைது செய்து போலீசார் சிறையில் அடைத்ததாகவும் கூறி  அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்க பொதுமக்கள் காத்திருந்தனர். 

மேலும் நத்தம் காலனி பிரச்னையில், அதிமுகவினர் யாரும் அப்பகுதி  மக்களுக்கு ஆறுதலாக செயல்படவில்லை என்றும், வாக்கு சேகரிக்க  வரும் அதிமுக அமைச்சர் பழனியப்பன் காரை முற்றுகையிடவும்  திட்டமிட்டு லலிதானூர் கிராமத்தின் மையப்பகுதியில் மக்கள்  திரண்டனர். இது குறித்த தகவல் அறிந்த அமைச்சர் பழனியப்பன்  மற்றும் அதிமுகவினர் ஊருக்குள் செல்லாமல் கிராம எல்லையிலேயே  வாக்கு கேட்டு விட்டுச் சென்றனர். பிரசாரம் செய்யச் சென்ற இடத்தில்  எதிர்ப்பு தெரிவித்ததால், பிரசாரத்திற்கு செல்லாமல் அதிமுக  அமைச்சர் திரும்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக