வியாழன், மே 09, 2013

கர்நாடகா:முதல் தேர்தலிலேயே பலத்தை நிரூபித்த எஸ்.டி.பி.ஐ!

பெங்களூர்:கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் முதன்முதலாக போட்டியிடும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது. 24 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிட்டது. மொத்தம் 1,00,541 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. எஸ்.டி.பி.ஐக்கு ஒரு தொகுதியில் 2-வது இடமும், ஐந்து இடங்களில் 3-வது இடமும், ஒன்பது தொகுதிகளில் நான்காவதும் இடமும் மூன்று இடங்களில் 5-வது இடமும் கிடைத்துள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளின் அனைத்து அவதூறுப் பிரச்சாரங்களையும் முறியடித்து எஸ்.டி.பி.ஐ இவ்வளவு முன்னேற்றத்தை கர்நாடகா சட்டப்பேரவையில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மைசூர் மாவட்டத்தில் நரசிம்ஹராஜா தொகுதியில் எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளரும், கர்நாடகா மாநில எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவருமான அப்துல் மஜீத், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பாரம்பரியமாக காங்கிரஸின் தொகுதியான இங்கு வெற்றிப் பெற்றவர் அக்கட்சியின் வேட்பாளர் தன்வீர் சேட் ஆவார். கர்நாடகா அரசியலில் செல்வாக்குப் பெற்றவரான காங்கிரஸின் அஸீஸ் சேட் 5 தடவை வெற்றிப்பெற்ற இத்தொகுதியில் அவரது மகன் தன்வீர் சேட் 3-வது முறையாக வெற்றிப்பெற்றுள்ளார். தன்வீர் சேட் 38,037 வாக்குகளையும், அப்துல் மஜீத் 29,667 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இத்தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதாதளத்தின் சதீஷிற்கு 29,180 வாக்குகள் கிடைத்தன. பா.ஜ.க வேட்பாளர் மஞ்சுநாத் 12,447 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் கட்சியான வெல்ஃபெயர் பார்டிக்கு 322 வாக்குகள் கிடைத்துள்ளன. எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் அப்துல் மஜீதை விட 8370 வாக்குகள் அதிகம் பெற்று தன்வீர் சேட் இத்தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளார். வெற்றிப் பெற்றால் தன்வீர் சேட் அமைச்சராவார் என்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் மக்களிடம் எடுபட்டதன் விளைவே அக்கட்சி வெற்றிப்பெறக் காரணமாகும்.
சர்வஞ்சா நகரில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலாளர் மெஹபூப் ஆவாத் ஷெரீஃப் 11,196 வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.கே.ஜார்ஜ் வெற்றிப்பெற்றுள்ளார். தாழ்த்தப்பட்டமக்களுக்கான(எஸ்.சி) தனித் தொகுதியான பெங்களூரில் உள்ள புலிகேசி நகரில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஹேமலதா 5431 வாக்குகளைப்பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்த பிரசன்னக்குமார் தோல்வியை தழுவினார். மதசார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர் ஆர்.அகண்ட ஸ்ரீனிவாஸ் மூர்த்தி இத்தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார். பென்வால் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் அப்துல் மஜீத், மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட அக்ரம் ஹஸன், மங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அபூபக்கர் ஆகிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர்கள்  3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
பொறியாளர் இஸ்மாயீல், முஜாஹித் பாஷா, குஸப்பா, உஸ்மான் பேக், முஹம்மது தாஹிர், ஃபிரோஸ் அலி கான், கே.ஏ.சித்தீக், அப்துல் ஹகீம் ஆகிய எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர். எஸ்.டி.பி.ஐக் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் கட்சியின் தேசிய செயலாளர் அப்துல் மஜீத் பைஸி நன்றி தெரிவித்துள்ளார். முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காது போய்விடுமோ என்ற அச்சத்தில் எஸ்.டி.பி.ஐ மற்றும் அதன் வேட்பாளர்களுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடப்பட்டன. பல இடங்களிலும் கட்சி உறுப்பினர்களை தாக்கவும் முயற்சிகள் நடந்தன. எஸ்.டி.பி.ஐப்போல சொந்த பலத்தை நம்பி போட்டியிட்ட வெல்ஃபெயர் பார்டிக்கோ, முஸ்லிம் லீக்கிற்கோ போதிய வாக்குகளையோ, செல்வாக்கையோ கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பெற முடியவில்லை. ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் 1473 வாக்குகளையும், 12 வேட்பாளர்களை களமிறக்கிய வெல்ஃபெயர் பார்டிக்கு 9701 வாக்குகளும் கிடைத்துள்ளன.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக