புதன், மே 29, 2013

பாஜக அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது! - ராம் ஜெத்மலானி!

புது டெல்லி: "முட்டாள்தனமான நடவடிக்கை எடுத்துள்ள பாஜக பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகிறது" என கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக 6 ஆண்டுகாலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பாஜகவின் தலைமையை விமர்சித்ததற்காக மூத்த வழக்கறிஞரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து ராம்ஜெத்மலானி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் இது குறித்து கூறும்போது,


"சமூக விரோதிகளிடம் உள்ள கருப்பு பணம் குறித்து பேசுவதற்கோ, அதை திரும்ப பெறுவதற்கோ பாரதீய ஜனதா கட்சியில் சிலர் விரும்பவில்லை. கட்சிக்குள்ளே சில விரும்பத்தகாத சக்திகள் இருக்கின்றன. அவர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றவே நான் விரும்புகிறேன். அந்த விரும்பத்தகாத சக்திகள் தான் நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம்.

அவர்களை வெளிக்காட்டும் வரை நான் ஓயப்போவதில்லை. நான் தொடங்கிய கருப்பு பண விவகார பிரச்சாரம் அவர்களை வெட்கப்பட வைத்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வரக்கோரி காங்கிரசுக்கு எதிரான எனது கோரிக்கைகளுக்கு கட்சியிலே ஆதரவு இல்லை.

மேலும் என் மீது எடுத்துள்ள இந்த முட்டாள் தனமான நடவடிக்கையால் பாஜக அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த முட்டாள்தனமான நடவடிக்கையால் அவர்கள் பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகிறார்கள்."

என்று கூறினார்.

கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான ராம் ஜெத்மலானி பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதற்குக் கட்சிக்குள்ளே எதிர்ப்பு குரல்கள் எழும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக