புதன், மே 08, 2013

கூடங்குளம் : உச்ச நீதிமனறம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் நலனுக்கு எதிரானது ! கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி!

கூடங்குளம் : உச்ச நீதிமனறம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் நலனுக்கு எதிரானது என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு;
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, அணு உலை இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது துரதிஷ்டவசமானது.மேலும் அப்பகுதி மக்களின் வாழ்வாதார உரிமை உள்பட எவ்விதமான உரிமையும்  கணக்கில் எடுக்காமல் அணுஉலை இயங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
மக்களின் உணர்வுகளை முற்றிலுமாக நிராகரிக்கும் இந்த தீர்ப்பு மக்கள் நலனை கண்டுகொள்ளாத தீர்ப்பாகும். மேலும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் எரிபொருளை வெளியே கொண்டு செல்லாமல் அந்த நிலையத்துக்கு உள்ளேயே நிரந்தரமாகப் பாதுகாப்புடன் சேமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதனால் ஏற்கனவே அச்சத்தின் பிடியிலிருந்த அப்பகுதி மக்களிடம் இந்த தீர்ப்பு மேலும் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. தரமற்ற கொதிகலன்கள், உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட இந்த அணுமின் நிலைய வளாகத்தில் ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது மேலும் தரமற்ற கேபிள் இணைப்புகளால் மின்கசிவு, வாயு கசிவு ஏற்பட்டு இதுவரை 6 பேர்  இறந்துள்ளனர்.
கூடங்குளத்தில் உள்ள இந்த அணுமின் நிலையத்தால் மன்னார் வளைகுடா பகுதியே மாசுபடும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும் அணு கழிவுகளை எங்கே புதைப்பது, அதிலிருந்து வெளியாகவும் அணுவீச்சின் தன்மை என்ன என்பதை தெரிவிக்காமல் உள்ளது அணுசக்தி கழகம்.
அணு உலை அமைப்பதில் சட்ட ரீதியாக நிறைவேற்றப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றாமல் அணு உலையை திறக்க அனுமதிக்க கூடாது என்பது வழக்கின் சாராம்சம். ஆனால் இதுபற்றிய விசாரணையின்றி, தீர்ப்பில் கூடங்குளம் அணுவுலை பாதுகாப்பானது என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.விபத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவது பற்றிய கேள்விகளுக்கு தீர்ப்பில் எந்த பதிலும் இல்லை.
முன்னதாக அணு உலைக்கு உதிரி பாகங்கள் வழங்கிய ரஷ்ய நிறுவனத்தின் அதிகாரிகள் தரமற்ற அணு உலை பாகங்கள் விற்பனை, ஊழல் குற்றசாட்டு ஆகியவற்றின் கீழ் ரஷ்ய போலீசார் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்ட அணு உலை பாகங்களின் தரம் குறித்தும் சந்தேகம் எழுகிறது.
இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை கண்டுகொள்ளாமல் அணு உலை இயங்க அனுமதித்திருப்பது என்பது மிகவும் வேதனைக்குரியது. இந்த தீர்ப்பு கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை தடுக்காது என்றே கருதுகிறேன்.
அணுஉலைக்கு எதிரான போராட்டத்திற்கு குஈகஐ கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாரு எஸ்.டி.பி.ஐ கட்சி யின் மாநில தலைவர் தெரிவித்தார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக