வியாழன், மே 30, 2013

திருமணம் ஆகாமலேயே தாயான பெண்ணுக்கு பிறந்தது கழிவுநீர் குழாயில் மீட்கப்பட்ட குழந்தை பற்றி உருக்கமான தகவல்கள்!

சீனாவில் கழிவுநீர் குழாயில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணம், ஜின்ஹுவா நகரில் நடந்த இந்த சம்பவம் நேரடியாக டெலிவிஷனில் ஒளிபரப்பானதால், அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது.

 கடந்த சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்து இருந்தாலும், அந்த குழந்தை பற்றிய விவரங்கள் நேற்றுதான் வெளியாகி உள்ளன. குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் குளியல் அறையுடன் இணைக்கப்பட்டு இருந்த 3 அங்குலம் மட்டுமே சுற்றளவு கொண்ட கழிவுநீர் குழாயில் அன்றுதான் பிறந்த அந்த அழகிய ஆண் குழந்தை சிக்கி இருந்தது.
கட்டிடத்தின் குளியல் அறையில் உள்ள டாய்லெட் கோப்பையுடன் இணைந்து சுவருக்கு வெளியே இருந்த குழாயின் கீழ் பகுதியில் அந்த குழந்தை சிக்கி இருந்தது. தகவல் அறிந்ததும் தீயணைக்கும் படையினரும் டாக்டர்கள் குழுவினரும் உடனடியாக அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் குழாயில் குழந்தை சிக்கி இருந்த பகுதியை அப்படியே தனியாக அறுத்து எடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
குழாயை இரண்டாக பிளந்து உயிருடன் இருந்த குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்ட காட்சி.
 அங்கு டாக்டர்கள் ஆலோசனைப்படி, கழிவு நீர் குழாயை மிக கவனமாக இரண்டாக அறுத்து பிளந்து பார்த்தபோது லேசான காயங்களுடன் குழந்தை அழுது கொண்டு இருந்த காட்சி, பார்த்தவர்களை மகிழ்ச்சி பரவசம் அடைய வைத்தது.
ஏறத்தாழ 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட அந்த குழந்தை, 2.8 கிலோ எடை இருந்தது. உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு ‘இன்குபேட்டர்’ பெட்டிக்குள் வைத்து பராமரிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அந்த குழந்தை நன்றாக தூங்கியது.
குழந்தையை காப்பாற்றும் பதற்றத்தில், அந்த குழந்தையை பெற்றது யார் என்பதில் போலீசார் முதலில் கவனம் செலுத்தவில்லை. குழந்தை கழிவுநீர் குழாய்க்குள் விழுந்த அறையில், பிரசவம் நடந்ததற்கான அறிகுறியே இல்லை. ஆனால், அங்கு தங்கி இருந்த திருமணம் ஆகாத பெண்தான் அந்த குழந்தையை பெற்றவள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
குழந்தை கோப்பைக்குள் விழுந்து குழாய்க்குள் நழுவிச்சென்றதும் முதலில் அபாய குரல் எழுப்பியதும் அந்த பெண்தான். ஆனால், 2 மணி நேர போராட்டத்தின்போது அந்த பெண் தன்னை யாரிடமும் அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை.
திருமணம் ஆகாமலேயே அந்த பெண் கர்ப்பம் தரித்து இருந்தது அந்த வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்குக்கூட தெரியாமல் இருந்து இருக்கிறது.
அந்த அளவுக்கு மிக தளர்வான உடைகளை அணிந்து அடிவயிறுப்பகுதியை இறுக்கமாக கட்டி வைத்து இருக்கிறாள். பிரசவம் நடந்ததும் அதன் தடயமே தெரியாத அளவுக்கு அறையை சுத்தமாக கழுவி விட்டு இருக்கிறாள்.
முதலில் குழந்தையை கொலை செய்யும் நோக்கத்தில் கழிவறை கோப்பைக்குள் அந்த பெண் வீசி இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், விசாரணையில் அது உண்மையல்ல என்றும் தெரிய வந்தது. குளியல் அறைக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக பிரசவம் நடந்ததால், அந்த குழந்தை தவறி கோப்பைக்குள் விழுந்து குழாய்க்குள் சென்றுவிட்டது.
சிகிச்சைக்கு பின் குழந்தை அமைதியுடன் தூங்குவதை படத்தில் காணலாம்.
விசாரணையின்போது அந்த பெண் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த பெண் மீது எந்த வகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீஸ் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் பற்றிய காட்சியை சீனாவில் டெலிவிஷனில் பார்த்த ஏராளமானவர்கள் இணையதளத்தில் உருக்கமான கருத்துகளை தெரிவித்து இருந்தனர். பெற்ற தாயே அந்த குழந்தையை கைவிட்டு இருக்கலாம் என்று கருதிய பலர் குழந்தைக்கான பவுடர், சோப்பு மற்றும் துணி மணிகளுடன் அந்த குழந்தையை தத்து எடுப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தவண்ணம் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக