வெள்ளி, மே 17, 2013

சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்து: அனுமதியின்றி கைது செய்ய தடை!

புது டெல்லி: சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவோரை உரிய அனுமதி பெறாமல் கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியன் பொதுச்செயலாளர் ஜெயா விந்தயாள், சமீபத்தில் 'பேஸ் புக்' சமூக வலைத்தளத்தில், தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமாஞ்சி கிருஷ்ணமோகன் ஆகியோர் மீது சர்ச்சைக்கிடமான வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-ஏ யின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதற்கு முன்னர் சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்தின்போது, நடத்தப்பட்ட பந்துக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த ஷஹீன் ததா என்ற பெண்ணையும் அவர் கருத்துக்கு லைக் போட்டதற்காக அவர் தோழி ரேணு சீனிவாசனையும் இதே சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அப்போது ஸ்ரேயா சிங்கால் என்ற சட்டக்கல்லூரி மாணவி, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 ஏ அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்பதால் அச்சட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியன் பொதுச்செயலாளர் ஜெயா இதே சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரேயா சிங்கால், இச்சட்ட நீக்கம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது மாநில அரசுகள் இச்சட்டப்படி கைது செய்வதை உச்ச நீதிமன்றம் தடுக்கவேண்டுமெனக்கோரி மற்றொரு முறையீடு செய்ததோடு, அதனை அவசர மனுவாக கருதி உடனே விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்று மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மறும் தீபக் மிஷ்ரா ஆகியோர், விசாரணைக்குப் பின்னர் "சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டால், காவல்துறை உயர் அதிகாரியின் அனுமதியைப்பெறாமல் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது" என அறிவுறுத்தியதோடு, "மத்திய அரசு கடந்த ஜனவரி 9-ந்தேதி அனுப்பியுள்ள அறிவுரையை கண்டிப்புடன் அமல்படுத்துவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்" எனவும் தீர்ப்பளித்தனர்.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள முந்தைய அறிவுரைக்குறிப்பில், "தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-ஏயின்படியான புகாரைப் பதிவு செய்து, ஒருவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது, மெட்ரோபாலிட்டன் நகரங்களில் காவல்துறை ஐ.ஜி., மாவட்ட அளவில் காவல்துறை துணை கமிஷனர் அல்லது காவல்துறை கண்காணிப்பாளரின் உரிய அனுமதி பெறாமல் கைது செய்யக்கூடாது"என அறிவுறுத்தியிருந்தது.

இந்த அறிவுரையினையே கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக