திங்கள், மே 20, 2013

சிரியா பொதுமக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி!

சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிக் குழுக்களும் தற்பொழுது ஆயுதம் எந்தி போரிட்டு வருகின்றனர். இந்தப் போரில் இது வரை 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதுடன் 15 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
பொதுமக்களை ஒடுக்க ஏவி விடப்பட்டுள்ள ராணுவத்தில், அண்டை நாட்டை சேர்ந்த போராளிகளும் உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
நேற்று ஊடகத்திற்கு பேட்டியளித்த சிரியா ஜனாதிபதி பஷீர் அல் ஆசாத் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், டமாஸ்கஸ் அருகே உள்ள ஹோம்ஸ் மாகாணம் குசைர் நகருக்குள் இன்று நுழைந்த ராணுவத்தினர் அப்பாவி பொதுமக்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர்.
வீடுகள் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ராணுவம், உயிருக்கு பயந்து வெளியே ஓடி வந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இந்த தாக்குதலில் 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ராக்கெட் தாக்குதலில் வீடுகள் பற்றி எரிவதால், குசைர் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக