வியாழன், மே 30, 2013

பிசிசிஐ மீது மோசடி வழக்கு! : மும்பை நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் பொதுமக்களை ஏமாற்றியதாக மோசடி வழக்கு பதிய வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

மும்பையில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த நரேஷ் மகானி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், மற்றும் பிசிசிஐ நிர்வாகிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளின் முடிவுகளும் முன்பே தீர்மானிக்கப்பட்டதாகவும், பங்கேற்ற அணிகளின் உரிமையாளர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.


ஸ்ரீநிவாசனுக்கு முற்றும் நெருக்கடி:
நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் இன்று முக்கிய திருப்பத்தை சந்தித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் அருண் ஜேட்லி, ராஜிவ் சுக்லா உள்ளிட்டோர் பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனுக்கு எதிராக திரும்பியுள்ளதால், அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தமது மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டாலும், பிசிசிஐ தலைவர் பதவியில் ஸ்ரீநிவாசன் சிக்கலின்றி நீடித்து வருகிறார் . ஆனால், அவருக்கு எதிராக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க தலைவரும், மத்திய அமைச்சருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று குரல் எழுப்பியதும் நிலைமை வேகமாக மாறி வருகிறது.
ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ துணைத் தலைவரும் பாரதிய ஜனதா மூத்த தலைவருமான அருண் ஜேட்லியை இன்று சந்தித்துப் பேசினார். ஸ்ரீநிவாசன் விவகாரம், பிசிசிஐ உறுப்பினர்களின் நிலைப்பாடு போன்றவை குறித்து இருவரும் ஆலோசித்தனர். பின்னர் பேசிய ராஜீவ் சுக்லா, சூதாட்டப் புகார் தொடர்பாக விசாரிக்கும் 3 பேர் குழுவின் பரிந்துரைகள், பிசிசிஐயின் ஆலோசனையோ தலையீடோ இல்லாமல் நேரடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, சூதாட்டப் புகாரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். நாளை மறுநாள் வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க மும்பை காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பதவி விலக வலியுறுத்தல்:
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீநிவாசன் விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீநிவாசனுக்கு எதிராக ஆந்திர கிரிக்கெட் சங்கமும் திரும்பியுள்ளது. ஐதராபாத்தில் பேசிய அதன் தலைவர் வினோத், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை போன்று பிசிசிஐயும், ஐபிஎல் அமைப்பும் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
சரத்பவார் குற்றச்சாட்டு:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான சரத் பவாரும் ஸ்ரீநிவாசன் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கிரிக்கெட்டில் தற்போது நிலவும் குழப்பங்களுக்கு ஸ்ரீநிவாசனே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பதவி விலகுமாறு கூறவில்லை : ஸ்ரீநிவாசன்
ஐபிஎல் அமைப்பின் தலைவரான ராஜிவ் சுக்லா, தம்மை பதவி விலகுமாறு கூறவில்லை என பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன் விளக்கமளித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அதே நேரத்தில் கிரிக்கெட் சங்கங்களைச் சேர்ந்த மற்ற தனிப்பட்ட நபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என ஸ்ரீநிவாசன் மறுத்துவிட்டார்.
ஸ்ரீநிவாசனுக்கு எதிராக பொதுநல வழக்கு:
சூதாட்டம் காரணமாக தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், இதற்கு காரணமான ஸ்ரீநிவாசன் மீது கிரிமினல் வழக்குத்தொடர வேண்டும் எனக்கூறி கிரிக்கெட் ரசிகர்கள் 6 பேர் மும்பை நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக