செவ்வாய், மே 28, 2013

காலித் முஜாஹிதின் மரணம்:பாரபட்சமற்ற விசாரணை-முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் உறுதி!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தீவிரவாத வழக்கில் சிக்கவைத்து போலீஸ் காவலில் மர்மமான முறையில் காலித் முஜாஹித் மரணமடைந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று உ.பி மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளார்ந்த நேர்மையுடனும் மிக கவனத்துடனும் செயல்படுவோம் என்று தன்னை சந்தித்த முஸ்லிம் தலைவர்களிடம் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.காலித் முஜாஹிதின் உறவினர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மவ்லானா ஃபஸலுர்ரஹ்மான் வாஸி, முஃப்தி அப்துல் இர்ஃபான் மியான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில்சந்தித்துப்பேசினர். இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் முதல்வர் அகிலேஷ் யாதவிடம் அளித்தனர்.
முஸ்லிம் தலைவர்களுடனான சந்திப்பின்போது அகிலேஷ் யாதவ் கூறியது:எந்தவொரு நபர் மீது அநீதி இழைக்க மாநில அரசு அனுமதிக்காது.காலிதின் உறவினர்களுடைய கோரிக்கையை ஏற்று இவ்வழக்கின் விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஃபைஸாபாத் ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட்டின் கீழ் நீதி விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. இதுவல்லாமல், சம்பவம் நடந்த உடனே உள்துறை செயலாளர் ராகேஷ், கூடுதல் டி.ஜி.பி ஜாவீத் அக்தர் ஆகியோர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலிதின் போஸ்ட்மார்ட்டம் இரண்டு முஸ்லிம் டாக்டர்கள் அடங்கிய குழுவினர் நடத்தினர். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு உ.பி யின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பாவியான காலித் முஜாஹித் கைதுச்செய்யப்பட்டார்.இம்மாதம், 18-ஆம் தேதி பைஸாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு லக்னோ சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் போலீஸ்வேனில் வைத்து காலித் மரணம் அடைந்ததாக போலீஸ் கூறியது.ஆனால், போலீஸின் கொடூரச் சித்தரவதையில் காலித் மரணமடைந்தார் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Source : thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக