வெள்ளி, மே 17, 2013

காடுவெட்டி குரு உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு வழங்கக்கோரி அவசர மனு!

சென்னை: "பாமக பிரமுகவர் காடுவெட்டி குருவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றுகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வன்முறையினைத் தூண்டும் விதமாக பேசிய காரணத்தால் பாமக நிறுவனம் ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். காடுவெட்டி குருமீது பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது.


இந்நிலையில், குருவின் காவலை நீட்டிக்க திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்துக்கு அவரைக் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக குருவின் வழக்கறிஞர் பாலு சென்னை நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்து நீதிபதியிடன் குருவுக்குப் பாதுகாப்பு பலப்படுத்த கோரினார். அம்மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

"காடுவெட்டி குருவை புழல் ஜெயிலில் இருந்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்துக்குக் காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது, சாராயம் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மற்றும் ஆண்களுடன் ஒரே வாகனத்தில் குருவை அழைத்து சென்றுள்ளனர்.

ஏற்கனவே காடுவெட்டி குருவுக்குக் கொலை மிரட்டல் உள்ளது. ஆனால், அவரைப் பாதுகாப்பாக அழைத்து செல்லாமல், அவரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற சிறைவாசிகளுடன் அவரைக் காவல்துறையினர் அழைத்து சென்றனர். இதனால் குருவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே குருவைத் தனி வாகனத்தில், பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்."

இம்மனு அவசர மனுவாக கருதி நாளையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார். இம்மனு இன்று சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக