ஞாயிறு, மே 19, 2013

நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட "காலித் முஜாஹித்" நீதிமன்றக் காவலில் படுகொலை!

தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காலித் முஜாஹித் நேற்று (18/05) மாலை மர்மமான முறையில் இறந்து விட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும்போது போலீஸ் வேனில் மாரடைப்பால் மரணம் என போலீஸ் கூறுகிறது, ஜெயிலை விட்டு செல்லும்போது பூரண உடல் நலத்துடன் சென்றதாக ஜெயில் கண்காணிப்பாளர் கூறுகிறார். இது திட்டமிட்ட கொலை என்கிறார், காலிதின் வழக்கறிஞர் ரந்தேர் சிங்.

ஒரே மகனை இழந்த சோகத்தில், அவரது தந்தை மவுலானா சஹீர் ஆலம் ஃபலாஹி, மயக்கமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

30 வயது இளைஞரான காலித் முஜாஹித் மார்க்கம் படித்த "ஆலிம்" கைது செய்யப்படும் போது, மதரசா ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு கோரக்பூரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக சிக்க வைக்கப்பட்டவர் காலித் முஜாஹித். கைது செய்யப்பட்டபோதே அவர் ஒரு அப்பாவி என மக்கள் கொந்தளித்ததையடுத்து அன்றைய முதலவர் மாயாவதி நீதிபதி R .D . நிமேஷ் தலைமையில் (நிமேஷ் கமிஷன்) அமைத்து அதே வாரத்தில் உத்தரவிட்டார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு (2012 ஆகஸ்டில்) வெளியான நிமேஷ் கமிஷன் அறிக்கையில், கைது செய்யப்பட்ட காலித் முஜாஹித், தாரிக் காசிமி ஆகிய இருவருமே நிரபராதிகள் என தெளிவான சான்றுகளுடன் சொல்லப்பட்டுள்ளது. மேலும், இவர்களை கைது செய்வதற்கான சதி செய்ததாக 42 போலீஸ் அதிகாரிகள் மீது நீதியரசர் நிமேஷ் குற்றம் சுமத்தியிருந்தார்.

நிமேஷ் கமிஷன் அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பித்தால், அப்பாவிகளை சிக்க வைத்த 42 போலீஸ் அதிகாரிகள் மாட்டிக் கொள்வார்கள் என அஞ்சிய உத்தரப் பிரதேச அரசு நிரபராதிகள் மீதான வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து மட்டும் அறிவிப்பு செய்தது.

முஸ்லிம்கள் விடுதலையாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சில காவி நீதிபதிகள் அரசின் முடிவை ஏற்க மறுத்து அப்பாவிகளின் விடுதலைக்கு தடையாக இருந்து வந்தனர். காலிதின் மரண செய்தியால் ஜோன்பூர் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலம் முழுவதிலும் பெரும் பதட்டம் நீடிக்கிறது.

பெற்றோருக்கு ஒரே மகனான காலித், கைது செய்யப்படுவதற்கு ஒரு வருடம் முன்பு தான் (22 வயதில்) திருமணம் செய்துக் கொண்டார். அவரது இளம் விதவை மனைவியின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. 

நன்றி : மறுப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக