சனி, செப்டம்பர் 22, 2012

காவிரி விவகாரம் பெரிதாகிறது.. போராட்டத்தை தீவிரமாக்கும் கன்னட அமைப்புகள்- பந்த நடத்த திட்டம்?

 Cauvery Water Stokes Protests பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கூறி போராட்டத்தைத் தீவிரப்படுத்த கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக பந்த் நடத்தவும் அவை தயாராகி வருவதாகத் தெரிகிறது. காவிரியில் தமிழகத்துக்கு 9,000 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கர்நாடகத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இது தமிழகம் கோரும் நீரில் மிக மிகக் குறைவானதே என்றாலும், இதற்கே கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கடந்த
சனிக்கிழமை மண்டியா மாவட்டத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பந்த் நடத்தப்பட்ட நிலையில், மாநில அளவிலான பந்துக்கும் அவை தயாராகி வருவதாகத் தெரிகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எதியூரப்பாவின் நெருக்கடியால் இந்த அமைப்புகள் அமைதியாக இருந்து வந்தன. இப்போது கர்நாடக அரசியலில் தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு வடிகாலாக காவிரிப் பிரச்சனையை கையில் எடுக்க முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் முயல்வதாகத் தெரிகிறது.
இதனால் தான் அமைதியாக இருந்த கன்னட அமைப்புகள் திடீரென போராட்டத்தில் குதித்துள்ளதாகத் தெரிகிறது.
நேற்று பெங்களூர் மைசூரு பாங்க் சர்க்கிளில் வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தமிழகத்துக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும், மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மை, மத்திய அரசின் அறிக்கை நகல் ஆகியவையும் கொளுத்தப்பட்டனய
கூட்டத்தில் வாட்டாள் நாகராஜ் பேசுகையில், தமிழகத்துக்கு ஒரு துளி தண்ணீரை விட்டாலும், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் ராஜினாமா செய்ய வேண்டி வரும். காவிரி நதி நீர் பிரச்னையின் பின்னணியில், தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் விடுவதை எதிர்த்து மத்திய அமைச்சர்கள் கிருஷ்ணா, வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே, முனியப்பா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
ரயில் மறியல் போராட்டம்-தமிழக பயணிகள் அச்சம்:
அதே போல கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த அமைப்பினர் இன்று காலை பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷனில், பெங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து கோஷமிட்டனர்.
அதே போல மைசூரில் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தும், மாண்டியா, ஹாசன், ரெய்ச்சூர், கதக், தாவணகரே உள்ளிட்ட நகர்களிலும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில்களில் இருந்த தமிழர்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
இந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளடா தலைமையிலும் பெங்களூர் மைசூரு பாங்க் சர்க்கிளில் போராட்டம் நடந்தது.
நீரை நிறுத்திய கர்நாடகம்-மேட்டூருக்கு நீர்வரத்து குறைந்தது:
இந் நிலையில் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் கர்நாடகம் பாதியாகக் குறைத்துக் கொண்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வேகமாகக் குறைந்து வருகிறது.
தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொள்ளக் காத்திருக்கும் நிலையில், டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று திடீரென குறைக்கப்பட்டது.
கபினி அணையில் இருந்து புதன்கிழமை வரை விநாடிக்கு 9,083 கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது. ஆனால், இது வியாழக்கிழமை 4,816 கன அடியாகக் குறைக்கப்பட்டது. மைசூர் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்று 2,210 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
தமிழகத்துக்கு நீரைத் திறக்க வேண்டும் என்ற  உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நேற்றுடன் காலாவதியானதை அடுத்து, கர்நாடகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு 145 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் நிலையில், மேட்டூர் அணையில் நேற்றைய நிலவரப்படி 46 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.
கர்நாடக மாநிலம் தண்ணீர் தர மறுத்துவிட்ட நிலையில், அந்த மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இதனால், கர்நாடகத்தில் இருந்து மேலும் நீரை எதிர்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக சுமார் 12 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், மேட்டூரில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
டெல்டா பாசனத்துக்காக கல்லணை இன்று திறப்பு:
இந் நிலையில் மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவு கல்லணை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக இன்று காலை 9 மணி அளவில் கல்லணை திறக்கப்பட்டது
அமைச்சர்கள் சிவபதி, ஜெயபால், காமராஜ் ஆகியோர் கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர். ஆனால், மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், எப்போது வேண்டுமானாலும் நீர் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் விவசாயிகள் முழு நம்பிக்கையுடன் சாகுபடியை மேற்கொள்ள முடியாத நிலையே உள்ளது.
இதனால், தமிழக விவசாயிகள் அடுத்த மாதத்தில் பெய்ய வேண்டிய வட கிழக்குப் பருவமழையை மட்டுமே நம்பி முழு அளவிலான விவசாயப் பணிகளைத் தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் கர்நாடக ஆளுநர் பரத்வாஜை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் சந்தித்து காவிரி விவகாரம் குறித்து நேற்று மாலை விளக்கினார்.
இன்று முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக