புதுடெல்லி:கூடங்குளம் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பில் வீழ்ச்சி ஏற்பட்டால் அணுமின்நிலையத்தின் பணிகளை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த
பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக இந்த போராட்டம் நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று கூடங்குளம் போராட்டக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வேறு சிலரும் வழக்குகள் தொடர்ந்தனர். சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் சுந்தராஜன் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
கடந்த மாதம் 31-ந்தேதி கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் போலீசார் தடியடியில் முடிந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
அணுஉலையில் எரிபொருள் நிரப்ப ஐகோர்ட்டு கொடுத்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த என்ஜீனியர் சுந்தர்ராஜன், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் மாசு கட்டுப்பாடு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதில் குறைபாடு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதாடினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்பதல்ல. சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சமரசம் கிடையாது. தேவைப்பட்டால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தி வைப்போம்.” என்று தெரிவித்தனர்.
கூடங்குளம் அணுஉலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது குறித்து ஒரு வாரத்திற்குள் சுப்பரீம் கோர்ட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக