புதன், செப்டம்பர் 19, 2012

இஸ்லாமியர்கள் போராட்டம் எதிரொலி.. கமிஷனர் திரிபாதி பதவி காலி -புதிய கமிஷனர் ஜார்ஜ் !

 Chennai Police Commissioner Transfered சென்னை: சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் இன்று மாலை நடந்த வரலாறு காணாத இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக திரிபாதியின் பதவி பறிபோயுள்ளது.சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து இன்று இரவு திடீரென திரிபாதி மாற்றம் செய்யப்பட்டு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியான ஜார்ஜ் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றப்பட்ட
திரிபாதி, சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பின்னணி என்ன?
2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டவர் திரிபாதி. சென்னையில் கடந்த சில நாட்களாக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நாள் போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகத்துக்கு போதுமாக போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் பூத்களையும் உடைத்து நொறுக்கினர். இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.
இந்நிலையில் இன்றும் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான பேரணியை இஸ்லாமிய அமைப்புகள் நடத்தின.இதனால் சென்னை நகரின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும் பெரும் பரபரப்பையும், சென்னை நகரின் போக்குவரத்தையும் இந்தப் போராட்டம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது.
சென்னை அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி தங்களது உணர்வை வெளிப்படுத்தியிருந்தன்.
மேலும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் இதுவரை இப்படி ஒரு போராட்டத்தையும், தாக்குதலையும் சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
சர்ச்சைக்குரிய ஜார்ஜ்
அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜார்ஜின் கை எப்பொழுதுமே ஓங்கித்தான் இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போதும் சரி, தமிழக மக்கள் உணர்வுப் பூர்வமாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராடிய போது அவர்களை கண்மூடித்தனமாக ஒடுக்கியதிலும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதிலும் சரி ஜார்ஜின் பங்கு "அளப்பரியது". இப்பொழுது சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக