வியாழன், செப்டம்பர் 20, 2012

மத்திய அரசுக்கு முலாயம் ஆதரவு: கவிழும் ஆபத்தில் இருந்து தப்பியது

மத்திய அரசுக்கு முலாயம் ஆதரவு: கவிழும் ஆபத்தில் இருந்து தப்பியது
 டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீடுக்கு அனுமதி ஆகியவற்றை எதிர்த்து மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் அருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. அந்த கட்சியின் மத்திய மந்திரிகள் நாளை ராஜினாமா செய்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் விலகியதால் மத்திய அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டது. ஆனால் மாயாவதியின் பகுஜன் சமாஜ், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. 

இந்த இரு கட்சிகளும் டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீடு அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தொடர்ந்து ஆதரவு தருமா? அந்த கட்சிகளின் நிலை குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் மாயாவதி கட்சி மத்திய அரசுக்கு தொடர்ந்து வெளியில் இருந்து ஆதரவு நீடிக்கும், பாராளு மன்றத்துக்கு திடீர் தேர்தல் வருவதை விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டது. 

முலாயம்சிங் தனது கட்சியின் நிலை குறித்து இன்று அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி டெல்லியில் சமாஜ்வாடி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று கூடி விவாதிக்கிறது. இதில் மத்திய அரசுக்கு தொடர்ந்து வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் முடிவு எடுக்கப்படுகிறது. இது பற்றி சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் முலாயம்சிங் யாதவின் சகோதரருமான ராம் கோபால் யாதவ் கூறியதாவது:- 

மத்தியில் காங்கிரஸ் கூட்டனி அரசு நிலையற்ற தன்மையில் இருக்கிறது. அதன் நாட்கள் எண்ணப்படுகிறது. என்றாலும் நாட்டின் நலன் கருதி மத சார்பின்னை நீடிக்க வேண்டும், பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும். இதற்காக காங்கிரசுக்கு உதவி செய்வோம். மத்திய அரசு ஊழல் புகார்கள், விலைவாசி  உயர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்னோக்கி உள்ளது. இதில் எதிர்கட்சிகளுடன் நாங்களும் இணைந்து இருக்கிறோம். ஆனால் குஜராத் கலவரத்தை மறக்க முடியாது. எனவே மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும். இதற்கு மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைப்பு அவசியம். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதன் மூலம் மத்திய அரசு கவிழ்வதை சமாஜ்வாடி கட்சி விரும்பவில்லை என்று தெரிய வருகிறது. எனவேதான் அந்த கட்சி மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் முடிவை எடுக்கிறது. இதற்கிடையே சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவை பெற மத்திய அரசு சி.பி.ஐ. யை பயன்படுத்துவதாக மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி சவுகதாராய் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``முலாயம்சிங் யாதவ் மீதும், மாயாவதி மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை சி.பி.ஐ. கிடப்பில் போட்டு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி அந்த கட்சிகளின் ஆதரவை மத்திய அரசு பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வந்தால் சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் தயாராக உள்ளது என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக