மதுரை:இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக வெளியான அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரையில் நேற்று(சனிக்கிழமை) மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு மாசி-மேலமாசி வீதி
சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் நஜிமுதீன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ராஜா ஹசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சீனி முகமது, அப்துல் காதர் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய லீக் கட்சி உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது அமெரிக்காவை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அமெரிக்க கொடிகளும் எரிக்கப்பட்டன. ஒரு கொடும்பாவியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக