டீசல் விலை உயர்வை வாபஸ் பெற கோரி இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல ஓடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து உள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் திறந்திருக்கும். டீசல் விலையை சமீபத்தில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்திய மத்திய அரசு, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளைக்கும் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. மேலும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.டீசல் விலை உயர்வை வாபஸ் பெறுவதோடு, சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் தனியாகவும் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தனியாகவும் அழைப்பு விடுத்து இருக்கின்றன. பல்வேறு வர்த்தக அமைப்புகளும் இந்த முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.
முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் தமிழகத்தில் இன்று அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துவித பள்ளிக்கூடங்களும் வழக்கம் போல் இயங்கும் என்றும், அறிவிக்கப்பட்டபடி காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கு.தேவராஜன் அறிவித்து உள்ளார். கல்லூரிகள் அனைத்தும் இன்று திறந்து இருக்கும்.
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எந்த பிரச்சினையும் இன்றி செயல்பட போதுமான போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். அதுபோல் அனைத்து அரசு பஸ்களும் எந்தவித பிரச்சினையும் இன்றி ஓடுவதற்கு அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. பஸ்கள் ஓடுவதற்கு யாராவது இடையூறாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தங்கராஜ் கூறுகையில்:-
டீசல் விலை உயர்வால் தனியார் பஸ்களும் பாதிக்கப்பட்டுள்ளன. டீசல் விலை மீதான வரியை குறைக்க மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி இன்று அனைத்து தனியார் பஸ்களையும் இயக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
ரெயில்களும் வழக்கம் போல் ஓடும். இதுகுறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நாளை (இன்று) வழக்கம்போல மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும். வழக்கத்தை விட, ஓடும் ரெயில்கள், பிளாட்பாரங்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரெயில் நிலையங்களில் ரோந்து பணியில் இருப்பார்கள். எனவே பயணிகள் அச்சமின்றி ரெயில்களில் பயணம் செய்யலாம் என்றார்.
லாரிகள் உரிமையாளர்கள் சங்கமும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இன்று வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் இன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநில லாரிகள் உரிமையாளர்கள் சங்க சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில்; இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கிறோம். டீசல் விலையை மத்திய அரசு குறைக்காவிட்டால் அக்டோபர் 19ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில்; அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நடத்தும் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது என்றார்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன( சி.ஐ.டி.யூ.) பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தெரிவிக்கையில்; டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோக்கள் இன்று ஓடாது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டமும், அண்ணாசாலையில் பஸ் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
பாரதீய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
முழுஅடைப்புக்கு பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழ்நாட்டில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறுகையில்; முழு அடைப்புக்கு முழு ஆதரவு அளித்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடைஅடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும் இன்று நடைபெற உள்ளன என்றும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறுகையில்; முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும் என்றார்.
சென்னை கோயம்பேடு வியாபாரிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை மூடுகிறார்கள்.
தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அன்பு வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்து இறைச்சி வியாபாரிகளும் இன்று கடை அடைப்பு செய்யவேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்; தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் வழக்கம் போல் திறந்து இருக்கும் என்றும் காட்சிகள் நடைபெறும் என்றும் கூறினார்.
முழுஅடைப்பு போராட்டத்தையட்டி, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக