மக்கள் எங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த தேர்ந்தெடுத்துள்ளனர். ஒருவேளை அதில் இடையூறு ஏற்பட்டால் இடைத் தேர்தலை சந்திக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று காங்கிரஸ மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். மமதா பானர்ஜியின் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியினர் பெரிதாக கவலைப்படுவது போலத் தெரியவில்லை. அவரது முடிவு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், திரினமூல் காங்கிரஸை நாங்கள் எப்போதும் நல்ல நண்பராகவே பார்க்கிறோம். ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர்கள் கூறிய பின்னரும் கூட நல்ல நண்பராகவே பார்க்கிறோம். இறுதி முடிவு தெரியும் வரை அவர்கள் எங்களது நண்பர்தான் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இது மமதா பானர்ஜியின் இன்னும் ஒரு அரசியல் நடவடிக்கை. மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு ஆட்சியைத் தேர்வு செய்கிறார்கள். அதை அவர்கள் நிறைவு செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அது முடியாதபட்சத்தில் இடைத் தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும். நாங்கள் இடைத் தேர்தலுக்குத் தயார்.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பது நாட்டு நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவாகும். இது அரசியல் ரீதியாக வரவேற்கப்படாது என்பது எங்களுக்குத் தெரியும்தான். ஆனால் மக்கள் நலன் அதை விட முக்கியமானது என்பதால் அதை எடுத்தோம். அதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருப்போம். எப்படி, அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் நாங்கள் இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பை உறுதியாக இருந்து சமாளித்து வெற்றி கண்டோமோ அதேபோல இதிலும் நாங்கள் உறுதியாக இருப்போம் என்றார் திக்விஜய் சிங்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக