சனி, செப்டம்பர் 29, 2012

பிரதமர் உத்தரவுப்படி காவிரியில் 9000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு !

டெல்லி: காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமரின் உத்தரவுப்படி கர்நாடக அரசு அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த 19ம் தேதி பிரதமர் தலைமையில் காவிரி
நதிநீர் ஆணையக் கூட்டம் நடந்தது. அப்போது, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 9,000 கன அடி வீதம் 25 நாட்களுக்கு வழங்கும்படி பிரதமர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்க கர்நாடக அரசு ஏற்க மறுத்தது. குறைந்த அளவு நீரையே திறந்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் லோகூர் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காவிரி ஆணைய தலைவரான பிரதமரின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பிரதமரின் உத்தரவை நிராகரித்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவராக உள்ள பிரதமர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர். அவரது ஆணையை மதித்து நடக்க வேண்டும். கர்நாடகம் அதனை மீறுவது தவறு என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். 

மேலும் காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கர்நாடக அரசு அக்டோபர் 15ம் தேதி வரை வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக தமிழகத்தில் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், அரசியல் சட்டத்தின் 355வது பிரிவின் கீழ் ஒரு மாநிலத்தின் நலனைக் காக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. இதைச் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். தேவைப்பட்டால் கர்நாடகத்தில் ராணுவத்தை நிறுத்தி காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை அமலாக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.
அக்டோபர் 8ல் காவிரி கண்காணிப்புக் குழு கூடுகிறது:
இந் நிலையில் காவிரி கண்காணிப்புக் குழு அக்டோபர் 8ம் தேதி கூடுகிறது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் டெல்லியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக