சனி, செப்டம்பர் 22, 2012

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: கொந்தளிப்பை தணிக்க அமெரிக்கா முயற்சி !

இஸ்லாமாபாத்:இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் உலகமெங்கும் முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு நடந்த வன்முறையில் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் தொலைக்காட்சி சானல்களில் முஸ்லிம்களின் கொந்தளிப்பை தணிக்கச்
செய்ய விளம்பரம் ஒன்று அமெரிக்கா சார்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனும் கண்டனம் தெரிவிக்கும் காட்சி அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. ‘இன்னஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கும் அமெரிக்காவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறும் செய்தி விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன்பெயரால் நடக்கும் தாக்குதல்களுக்கு எவ்வித நியாயமும் இல்லை என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டதாக ஒபாமா தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார். 30 விநாடிகள் கொண்ட இந்த விளம்பரத்தை பாகிஸ்தான் தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்ப 70 ஆயிரம் டாலர் செலவழித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் பெயரால் அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா சீரியஸாக கருதுவதாகவும், கோடிக்கணக்கான பாகிஸ்தான் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட தொலைக்காட்சி விளம்பரம் உதவும் என்றும் நியூலாண்ட் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக