வியாழன், செப்டம்பர் 27, 2012

யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள் !

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டது. அதிக கடன் சுமையில் இருந்து மின் வாரியத்தை மீட்கவும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை தொடங்கவும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின் பற்றாக்குறைக் காரணமாக  கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கியது மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்த வகையில் மட்டும் மின் வாரியத்துக்கு ரூ.1,623 கோடி
கூடுதல் செலவாகி உள்ளதாம்.
இதனால் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு 2012ல்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தற்போதும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான். ஆனால் டீசல் விலை உயர்வு, நிலக்கரி விலை உயர்வு, மின்சாரத்தை கொள்முதல் செய்வது மற்றும் கொண்டு வருவதற்கான செலவு உயர்ந்து விட்டன. இதனால் மின் வாரியத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,623 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி செய்ய வேண்டிய கட்டாய நிலையில் மின்வாரியம் உள்ளது.
எனவே மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்கு 6 பைசா உயர்த்தினால் தான் இழப்பை சரி செய்ய முடியும் என்று கூறியுள்ளது மின்சார வாரியம்.
வழக்கமாக மின் கட்டணம் உயர்த்தப்படும் போது பொது மக்களிடம் கருத்து கேட்டு அதன்பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவது பற்றி ஆணையம் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.
ஆனால் நிலக்கரி உயர்வின் காரணமாக மின் உற்பத்தி விலை அதிகமானால் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் உடனுக்குடன் விலையை உயர்த்தலாம் என்றும் விதி உள்ளதாம். 

அதன் அடிப்படையில் அடுத்த மாதம் முதல் யூனிட்டுக்கு 6 பைசா விலை உயர்த்த வழிவகை வாய்ப்புகள் உள்ளன.

அதாவது இதுபற்றி ஆணையம்தான் முடிவு எடுத்து அறிவிக்குமாம், இதில் மாநில அரசுக்கு சம்பந்தமே இல்லையாம். (அப்படியா!?)
மீண்டும் உயரப் போகும் மின் கட்டணத்துக்கு தயாராகுங்கள்!.
டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடுத்த அடியாக மின் கட்டண உயர்வு வரப் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக