டெல்லி: 3 தடவைக்கு மேல் தேர்தலில் தோற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வரும் 2014ம் ஆண்டு நடைபெறவிருக்கிறது. இதையடுத்து தேர்தல் குறித்து ஆலோசிக்க ராஞ்சியில் நேற்று ஆலோசனை கூட்டம்
நடந்தது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திகலந்து கொண்டு பேசியதாவது, வேட்பாளர்களை கடைசி நேரத்தில் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எந்த தேர்தலாக இருந்தாலும் சரி வேட்பாளரை தேர்தலுக்கு 7 அல்லது 8 மாதத்திற்கு முன்பு அறிவிக்க வேண்டும். வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இனிமேல் தீவரமாக கவனம் செலுத்தவிருக்கிறேன். அதனால் நீங்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் 2014ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகுங்கள்.
நாடாளுமன்றத் தேர்தலானாலும் சரி, சட்டசபை தேர்தலானாலும் சரி 3 தடவைக்கு மேல் தோல்வியடைந்தவர்களுக்கு இனி மீண்டும் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது. அவ்வாறு தோற்றவர்கள் தாங்களாகவே விலகி பிறருக்கு வழிவிட வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி சண்டை அதிகமாகி வருகிறது. இதை தவிர்க்க வேண்டும். இனிமேல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒற்றுமையாக பணியாற்றினால் தான் நாம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியமைக்க முடியும். கிராமங்களுக்கு சென்று மக்களோடு மக்களாக பழகுங்கள். நிச்சயம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
மத்திய அரசுக்கு ஆபத்தில்லை:
மத்திய அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது.
அதில் பேசிய சோனியா கூறுகையில்,
இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் நாட்டிற்கு மிகவும் அவசியம். எந்த திசையில் செல்ல வேண்டுமோ அரசு அந்த திசையில் தான் செல்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து ஒரு கட்சி விலகியுள்ளது. மேலும் இரண்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. அதனால் அரசு நிலையாகத் தான் உள்ளது. மத்திய அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆட்சியில் இல்லாதபோதும் காங்கிரஸ் பொறுப்பான எதிர்கட்சியாக செயல்பட்டது போன்று பாஜகவும் இருக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக